வேதமூர்த்தியின் கடிதம் மனிதாபிமானத்தின் ஆழ்ந்த குரல்

வேதமூர்த்தியின் கடிதம் மனிதாபிமானத்தின் ஆழ்ந்த குரல்

ஜடாயூ குரல்- செப்டம்பர் 25

மலேசியா அடுத்த மாதம் நடத்த உள்ள ஆசியான் உச்சி மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழைப்பை எதிர்த்து மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP) தலைவர் வேத மூர்த்தி, பிரதமர் அன்வாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் வெறும் அரசியல் விமர்சனமல்ல; மனிதாபிமானத்தின் ஆழ்ந்த குரலாகவும் ஒலிக்கிறது.

டிரம்ப் நடுநிலை விருந்தினர் அல்லர் என்பதை வேத மூர்த்தி வலியுறுத்துகிறார். பாலஸ்தீன மக்களின் துயரத்தில் அவர் நேரடியாக பங்காற்றியவர். யெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது, பாலஸ்தீன அகதிகளுக்கான உதவிகளை நிறுத்தியது, சர்வதேச மேடைகளில் இஸ்ரேலை பொறுப்பிலிருந்து காப்பாற்றியது — இவை அனைத்தும் பாலஸ்தீன மக்களின் உயிரையும் மரியாதையையும் பறித்தன.

ஆகஸ்ட் 2023 வரை 65,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3,000 குழந்தைகள் அடங்குவர். காசா தினமும் குண்டு மழையில் எரிகிறது. மருத்துவமனைகள் இடிந்து விழுந்தன, நோயாளிகள் மருந்தின்றி தவிக்கின்றனர். ஜூலை மாதத்தில் மட்டும் 63 பேர் பசியால் இறந்தனர், அதில் 24 சிறு குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் குண்டுகளால் மட்டுமல்ல, பசியாலும் இறந்து வருகிறார்கள் என்பது மனிதகுலத்தின் மீது பாயும் கொடுமை.

மலேசியா இதுவரை எப்போதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே நிற்கிறது. சர்வதேச மேடைகளில் மலேசியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது. இஸ்ரேலை விளையாட்டு மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கத் தடை விதித்ததும் மலேசியா தான். ஆனால் இன்று அதே இஸ்ரேலை வெளிப்படையாக ஆதரித்த டிரம்பை அழைப்பது மலேசியாவின் நம்பகத்தன்மையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

“வார்த்தைகளால் அல்ல, செயல்களால்தான் மனிதாபிமானம் நிரூபிக்கப்படும்.” — ஜடாயு குரல்


இந்தியாவின் நிலையும் இதற்குள் மறக்க முடியாதது. இந்தியா பல தசாப்தங்களாக பாலஸ்தீனின் உரிமையை ஆதரித்து வருகிறது. ஆனால் அமெரிக்க அழுத்தங்கள், இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவுகள், உலக வணிக நலன்கள் — இவை காரணமாக இந்தியாவின் நிலை பெரும்பாலும் இரட்டை முகமாகவே தெரிகிறது. இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் நியாயம் பக்கச்சார்பின்றி நிலைநிறுத்தப்பட வேண்டும்.

வேத மூர்த்தியின் கடிதம் மலேசியாவுக்கு எச்சரிக்கை மணி. வார்த்தைகளால் அல்ல, செயல்களால்தான் உண்மை நிரூபிக்கப்பட வேண்டும். டிரம்ப் அழைப்பை ரத்து செய்வதே மலேசியாவின் மரியாதையையும் மனிதாபிமானக் கொள்கையையும் காப்பாற்றும் வழியாகும்.

ஜடாயுவின் குரல் இறுதியாக ஒலிக்கிறது:
“மனிதாபிமானம் விற்பனைக்கு போகுமா? இல்லை என்றால், மலேசியா அதை இப்போதே நிரூபிக்க வேண்டும்.”


பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்