கட்டுரை – 4 -செப்டம்பர் 23
இந்த ஒப்பீடு நம் நாட்டில் இந்தியர்களின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். இரு இனங்களும் பழமை வாய்ந்த பாரம்பரியங்களைக் கொண்ட இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து இங்கு குடியேறியவர்கள். என்றாலும் இன்று நிறைய ஒற்றுமை இருக்கிறதா?
நாட்டில் மக்கள் தொகை – இன விழுக்காடு

அண்மைய அரசாங்கக் கணிப்புப்படி மலேசியாவின் மக்கள் தொகை 34.2 மில்லியன் பேர். இதில் 17.9 மில்லியன் மலாய்க்கார புமிபுத்ராக்களும், 3.7 மில்லியன் மலாய்க்காரர் அல்லாத புமிபுத்ராக்களும், 6.8 மில்லியன் சீனர்களும், 2.0 மில்லியன் இந்தியர்களும், 2.4 இலட்ச மற்ற மலேசிய குடிமக்களும் இருக்கிறார்கள். மேலும் பிற நாட்டவர் 3.3 மில்லியன் பேர் மலேசியாவில் இருக்கிறார்கள்! ஏறக்குறைய 69.9 விழுக்காட்டினர் புமிபுத்ராக்கள், 22.8 விழுக்காட்டினர் சீனர்கள், 6.6 விழுக்காட்டினர் இந்தியர்கள் இந்த நாட்டில் வாழ்கின்றனர். மலேசியாவின் மக்கள் தொகையில் 79 விழுக்காட்டினர் தீபகற்ப மலேசியாவில் வாழ்கின்றனர்.
நாடு சுதந்திரமடைந்த போது, மலாயாவின் மக்கள் தொகை 6.3 மில்லியனாக இருந்தது. அதில் 49.8 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 37.2 விழுக்காட்டினர் சீனர்கள், 11.1 விழுக்காட்டினர் இந்தியர்கள், 2.0 விழுக்காட்டினர் மற்றவர்கள். பின்னர் மலேசியா உருவானபோது விழுக்காடு விகிதம் மாறவே செய்தது. எனினும் மலாயா சுதந்திரம் அடைந்தபோது 820,000 பேராக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 2,006,100 பேராக இருக்கிறது. சீனர்கள் இதே காலக் கட்டத்தில் 2,400,000 பேரிலிருந்து 6,849,600 பேராக உயர்ந்துள்ளார்கள். எனினும் நாட்டின் புமிபுத்ராக்களின் விழுக்காடு 49.8 இலிருந்து 69.9 ஆக 20.1 விழுக்காடு உயர்ந்துள்ளதை நாம் மறக்கக்கூடாது. சாபா, சாராவாக் பிராந்தியங்களின் பூமிபுத்ரா மக்கள் எண்ணிக்கை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்தியர்களின் விழுக்காடு குறைந்ததனால் அவர்களின் அரசியல் பலமும் குறைந்துள்ளதை நாம் உணரவேண்டும்.
அரசியல் பலம்

இன்றைய நிலையில் சீனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகள் நாற்பதுக்குமேல் இருக்கின்றன. ஏறக்குறைய இருபது விழுக்காட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பலம் இந்நாட்டுச் சீனர்களுக்கு உண்டு. இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்ற – ஏன், சட்டமன்றத் தொகுதியில்கூட பெரும்பான்மை இல்லை. நாட்டின் பெரும் மலாய் கட்சியின் ஆதரவுடனேயே மலாய்க்காரர்களை அதிக வாக்காளர்களாகக் கொண்ட தொகுதிகளில் நிற்கும் வாய்ப்பு கிடைத்து இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சி வேட்பாளர்கள் வெற்றியடைந்து வந்துள்ளார்கள். அம்னோ கட்சி மிகுந்த பலமாக இருந்த சமயம் இது சாத்தியமானது. இன்று இருக்கும் இன உணர்வு மேலிட்ட அரசியல் சூழலில் இது தொடர்ந்து சாத்தியமாகும் என்று சொல்வதற்கில்லை.
பல்லின கட்சிகளின் தன்மை

அதேபோல் சீன ஆதிக்கமுள்ள ஜனநாயக செயல் கட்சியிலுள்ள இந்தியர்கள் அக்கட்சியின் நிர்வாகம் அனுமதித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். பல்லின கட்சியாக இருந்தாலும், சீன ஆதிக்கமுள்ள ஜனநாயக செயல் கட்சியிலும், மலாய்க்காரர்களின் ஆதிக்கமுள்ள மக்கள் நீதிக் கட்சியிலும், அக்கட்சிகளின் கட்டமைப்புக்கு உட்பட்டு செயல்பட்டு கட்சியின் மேலிட பரிவைப் பெற்ற ஒரு சில இந்திய உறுப்பினர்களே தேர்தலில் நிற்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். பல்லின கட்சிகள் எல்லா மலேசியர்களையும் பிரதிநிதிப்பதால் அதன்படியே தேர்ந்தெடுக்கப் படும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட முடியும்/வேண்டும். மாறாக ஒரு குறிப்பிட்ட இன நன்மைக்காக மட்டுமே குரல் கொடுப்பவர்கள் இத்தகைய சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.
தற்போதைய நிலைமை

இருப்பினும் வரும் காலங்களில் சிறுபான்மை இனமான இந்தியர்களுக்கு இந்த நாட்டில் பல்லின கட்சிகள் மட்டுமே அரசியல் வாய்ப்பைக் கொடுக்கக் கூடும் என்பதும், இந்தியர் மட்டும் சார்ந்த அரசியல் கட்சிகள் பெரும் மலாய் கட்சிகளுடன் சேர்ந்து, அவை ஆட்சி அமைத்தால், மேலவை உறுப்பினர் ஆகி செயல்படும் எண்ணம் கொண்டு காயை நகர்த்துகின்றன என்பதும் வெள்ளிடைமலை. இந்த நிலை சீனர்களுக்கு இல்லை – காரணம் நகர்ப்புறங்களில் அவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகள் அவர்களுக்கு உண்டு. ஆனால் இந்தியர்களுக்கு அத்தகைய நிலைமை இல்லை என்பது அரசியலில் நமக்கு மற்றவர்களை சார்ந்து பயணிக்கவேண்டிய அவசியத்தைக் கூட்டியுள்ளது. மறுக்க முடியாது.
பெரும்பான்மையை நிர்ணயிக்கக் கூடிய இந்திய வாக்காளர்கள் சில தொகுதிகளில் இருப்பதாகக் கூறி நாம் வெற்றி-தோல்வியை முடிவு செய்பவர்களாக இருக்கிறோம் என சிலர் கூறி, பெருமை பட்டுக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. எல்லா இந்தியர்களும் ஒற்றுமையாக இருந்து ஒரே வேட்பாளருக்கு வாக்குகளைப் போடுவது என்பது நடைமுறையில் சாத்தியமா என்பதை இவர்கள் சிந்திப்பதில்லை.
அரசியலில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் என்பது உண்மை. நாம் மலேசியர்களாக நடந்துகொண்டு, அரசியல் செய்தால் மட்டுமே நாட்டுத் தலைவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றங்களைக் கொண்டுவர முடியும். வாழ்வியலில், சொந்த முயற்சியில், இந்நாட்டு சீக்கியர்களைப் போல் நடந்துகொண்டால் மட்டுமே உய்வுண்டு என்பதையும் உணர்வது அவசியம்.
சீனர்களின் அரசியல் பலம், பொருளாதார பலத்துடன் இணைந்துள்ளது

இந்நாட்டு சீனர்கள் – சீன நாட்டிற்கப்பால் வாழும் சீனர்களில், மிக அதிகமானோர் ஆவர். அவர்கள் இந்த நாட்டிற்கு சொந்தமாக வாழ்வாதாரம் தேடி வந்தவர்கள். இங்கேயே உழைத்து, பலதரப்பட்ட தொழில்களையும் வியாபரங்களையும் செய்து, பொருள் சேர்த்து, ஊரையும் நகரையும் உருவாக்கியவர்கள். ஒரு சமூகத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பை காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டு அதை இன்றுவரை தற்காத்து வருபவர்கள். சீன கட்டமைப்பில் பல செல்வந்தர்கள் உருவாகி, அவர்கள் தங்களின் இன உய்விரற்காக முதலீடு செய்து இன்று நாட்டின் அறுபது விழுக்காட்டு பொருளாதாரத்தை ஆளும் நிலையில் இருக்கிறார்கள். நாட்டின் பங்கு சந்தையைப் பாருங்கள். தெளிவு பிறக்கும். நாட்டின் பெரு நகரங்களைப் பாருங்கள் – எத்தனை கட்டடங்கள், பேரங்காடிகள், நிறுவனங்கள் சீனர்களின் ஆதிக்கத்தைப் பறை சாற்றுகின்றன! தீபகற்ப மலேசியாவில் மேற்கு கரையோர நகரங்கள் எல்லாம் சீனர் தாக்கம் மேலோங்கியுள்ளதை நகர் வளம் வந்தாலே பார்க்கலாம்.
சீனர்களின் முதலீடும் முயற்சியும் குறைந்த மாநிலங்கள் – பெர்லிஸ், கெடாவின் பெரும் பகுதி , கிளந்தான், திராங்கானு, பகாங்கின் பெரும் பகுதி, இன்றுவரை வளம் குறைந்து இருக்கின்றனவே. இது சிலரை எரிச்சலூட்டினாலும், சீனர்களின் பொருளாதார பிடி நாட்டில் மிக பலமாக உள்ளதையும் அவர்களின் கடின உழைப்பும் மூலதனமும் வாழவந்த நாட்டை வளம் அடைய தொடர்ந்து, காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்பட்டு முதல் நிலையில் உள்ளனர். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் சீன குத்தகையாளர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர். எவ்வளவு திட்டங்களைப் போட்டு இவர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க நினைத்தாலும், சீனர்கள் சளைக்காமல் முன்னணியிலேயே உள்ளனர். இவர்களுடைய வணிகம், குத்தகை, நாட்டிலுள்ள எல்லா மலேசியர்களுக்கும் பயன்பெறக் கூடியதாக இருக்கின்றன. இவர்கள் தங்கள் இனத்தையே சுற்றிவருவதில்லை என்பது தெளிவு.
மலாய்க்காரர்கள் மத்தியில் வியாபாரம் செய்ய, மலாய் முகத்தை முன்வைத்து பல பேரங்காடிகளையும் தொழில்களையும் நடத்துவதில் வல்லவர்கள். இந்த நாட்டில் தங்களின் முதல் நிலையை தக்கவைத்துக் கொள்வதில் எப்பொழுதும் குறியாக இருக்கின்றனர்.
இந்தியர்களின் பலமென்ன?

ஒரு காலத்தில் தமிழ்த் தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப் பட்டனர். இவர்களில் பெரும்பாலும், ஒப்பந்தக் காலத்திற்குப்பின் நாடு திரும்பினர். இந்த நாட்டிலேயே வாழவேண்டும் எனும் எண்ணம் கொண்டவர்கள் மிக சிலரே, எனவே தமிழ்த் தொழிலாளர்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தார்கள் என்றாலும், அவர்கள் தொடர்ந்து இங்கு வாழவில்லை என்பதே உண்மை. அவர்களுடைய ஒப்பந்த காலம் முடிவடைந்தபின் ஏறக்குறைய அனைவரும் ஆங்கிலேய காலனித்துவ அரசால் ‘தர்ம ஆர்டர்’ வழி இலவசமாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 1930 ஆம் ஆண்டுக்குப் பின் வந்தவர்கள், குறிப்பாக இரண்டாம் உலகப் போர் சமயம் இங்கு இருந்தவர்களில் பலர் மட்டுமே நாடு சுதந்திரம் அடையும்பொழுது இந்த நாட்டிலேயே இருக்க முடிவு செய்தனர் என்பதுதான் உண்மை.
முதலாளிக்கு சேவை செய்யும் உணர்வு
இதனால்தான் முதலாளி அல்லது காலனித்துவ அரசின் கட்டுப்பாட்டின்கீழ், அவர்கள் கொடுத்த வீடு, மற்ற வசதிகளைப் பயன்படுத்தி ஒரு சேவக உணர்வுடன் வாழ்ந்து வந்தார்கள் . திட்டுத் திட்டாக அவர்கள் மத்தியிலேயே வாழும் சூழலையே இவர்கள் பெற்றனர். தோட்டப் புறங்களில் பெரும்பாலும் மற்ற இனங்களுடன் இணைந்து செயல்பட கொண்டிராதவர்கள். அரசு இலாகாகளில் பணிபுரிந்தவர்கள் மட்டும் மற்ற இனங்களுடன் சேர்ந்து பணியாற்றினார்கள். பெரும்பாலும் தமிழர்கள் அரசு அமைத்துக் கொடுத்த ஊழியர் குடியிருப்பப் பகுதிகளில் அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்தனர். இவர்களும் ஒப்பந்தம் முடிந்தபின் தாய்நாடு திரும்பவே எண்ணம் கொண்டிருந்தனர்.வந்தோம், வேலை செய்தோம், கொஞ்சம் பணம் திரட்டினோம், தாய்நாடு திரும்புவோம் என்பதே நோக்கமாக இருந்தது.சொந்தமாக பொருளீட்ட வேண்டும் எனும் வேட்கை இல்லாத ஒரு சமூகமாக தொடர்ந்து காலத்தை இந்த சமூகம் ஓட்டியது என்றுதான் சொல்லவேண்டும்.
ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை

தொழிலாளர்களாக தமிழர்களையும் தெலுங்கர்களையும் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள், இந்தத் தொழிலாளர்களை மேற்பார்வையிட ஆங்கில அறிவுடைய படித்த மலையாளிகளையும், யாழ்ப்பாணத் தமிழர்களையும் கொண்டுவந்தனர். தோட்டப் புறங்களில் மலையாளிகளும், அரசு இலாகாக்களில் யாழ்ப்பாணத் தமிழர்களும் பணிபுரிந்தனர் என்பதும், தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகாமல் முதலாளி/உயர் அதிகாரிக்கே முழு விசுவாசம் காட்டி தொழிலாளர்களை அடிமைபோல் நடத்தினார்கள் என்பதும் பல விமர்சனங்களில் தெளிவாகியுள்ளது.
ஆங்கிலேயர்களின் அனுமதியுடன் அல்லது அழைப்பின்பேரில் சிறு வணிகம் செய்யவும், தொழில் புரியவும், ஆசிரியர்களாகப் பணிபுரியவும், அரசாங்க இலாகாக்களில் பணிபுரியவும் சிலருக்கு மலாயா வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் பணிபுரிந்து வந்ததால் சாதாரண தொழிலாளர்களுடன் தொடர்பு குறைவாகவே இவர்களுக்கு இருந்தது. இவர்களில் ஆங்கில அறிவுடையோர் அதிகமாக இருந்ததால், தங்கள் பிள்ளைகளை நகர்களில் இயங்கிய ஆங்கிலப்பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்தனர். இவர்களிலும் பலர் பணிக்காலம் முடிந்தபின் தாய்நாட்டுக்கே திரும்பும் எண்ணமே மேலோங்கி இருந்தது.
செட்டியார்களின் வருகை

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட, செல்வம் படைத்த தமிழ் செட்டியார்களை மலாயாவிற்கு அழைத்துவந்தனர். குறிப்பாக இங்கு தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளோருக்கு வட்டிக்கு கடன் கொடுக்கவும், சொத்துகளில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்பட்டனர். ஏறக்குறைய எல்லா பெரிய நகரங்களிலும் செட்டித் தெரு உருவாகின. அன்று வங்கி இல்லாத காரணத்தால், செட்டியார்கள் அந்த பணியைச் செய்தார்கள் என்பதே உண்மை. அவர்களின் கிட்டங்கிகள் இருந்த இடங்களுக்கு அருகில் கோயில் எழுப்பினர். பல ரப்பர் தோட்டங்களை வாங்கினர். குறிப்பாக் சீனர்கள் இவர்களிடம் கடன் வாங்கி தொழில் தொடங்கினர், சொத்து வாங்கினர் என்பது வரலாறு. மற்றவர்கள் வட்டிக்குக் கடன் வாங்கி அவர்களிடமிருந்த சிறு நிலப்பட்டாகளையும், நகைகளையும் அடகுவைத்தனர். அவற்றில் பல மீட்கப்படாமலேயே செட்டியார்கள் வசம் சென்றன என்பதும் வரலாறு.

செட்டித் தோட்டங்கள்
பல தோட்டங்கள் செட்டியார்கள் கைக்கு மாறிய சமயம், அங்கு பெரும்பாலும் தமிழ் தொழிலாளர்களே பணிபுரிந்தனர். நான் பிறந்து வளர்ந்த இடத்திலும் செட்டித் தோட்டங்கள் இருந்தன. தொழிலாளர்களுக்கான வீடும் வசதிகளும், ஆங்கிலேயார் வசமிருந்த தோட்டங்களில் காணப்பட்டவையை விட மோசமான நிலையில் இருந்ததோடு, தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தினர் என்பதையும் கண்கூடாகக் கண்டேன்.
நாடு சுதந்திரம் அடையும் பொது, அவசரமாக செட்டியார்கள் தங்கள் தோட்டங்களை பெரும்பாலும் சீனர்களிடம் விற்றுவிட்டு தங்கள் தாய்நாடு சென்றுவிட்டனர்
தொ.க. நாராயணசாமி,
பத்தியாளர்,
மலாக்கா
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *