சால்ட் லேக் சிட்டி, செப்டம்பர் 11 — அமெரிக்க அரசியலை உலுக்கிய அரசியல் கொலை சம்பவம். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், Turning Point USA அமைப்பின் நிறுவனர் தலைவருமான கன்சர்வேட்டிவ் ஆர்வலர் சார்லி கெர்க் (31), யூட்டா மாநிலத்தில் கல்லூரி நிகழ்ச்சியிலேயே துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3,000 பேர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வில், துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த தருணம் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. கெர்க் மேடையில் அமர்ந்திருந்தபோது கழுத்தில் சுடப்பட்ட குண்டால் ரத்தம் பெருகிய நிலையில் அவர் நாற்காலியிலிருந்து சரிந்தார். சிகிச்கை பயனளிக்காத நிலையில், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

யூட்டா மாநில ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், “இது ஒரு அரசியல் படுகொலை” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒருவரின் சிந்தனை காரணமாக உயிரை பறிப்பது, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளையே கேள்விக்குறியாக்குகிறது” என அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் மற்றும் கூட்டாட்சி புலனாய்வாளர்கள் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்புக் கேமராவில் கருமை உடையில் சந்தேக நபர் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை யாரும் காவலில் இல்லை. பல்வேறு இடங்களில் ‘செயலில் உள்ள குற்றப்பரப்புகள்’ எனக் கருதி விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சார்லி கெர்க், இரண்டு குழந்தைகளின் தந்தை. தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பேச்சுப் பயணத்தை முடித்து அமெரிக்கா திரும்பிய அவர், கல்லூரி வளாகங்களில் 15 நிகழ்ச்சிகளை கொண்ட “American Comeback Tour” நிகழ்ச்சித் தொடரின் முதல்நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக்கொலை நடந்தது.
அவரது மரணத்தைக் கண்டித்து குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், டொனால்டு டிரம்ப் தனது Truth Social தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “இந்த அரசியல் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் இடதுசாரி தீவிரவாதச் சொற்பொழிவுகளே நாட்டில் வன்முறையை தூண்டுகின்றன” எனக் குற்றம்சாட்டி, குற்றவாளிகளை கண்டிப்பாக பிடிக்கப்படும் என உறுதியளித்தார்.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *