ஆர்ப்பாட்ட பகுதிகளைத் தவிர்க்கவும்-முகமது ஹசான்

ஆர்ப்பாட்ட பகுதிகளைத் தவிர்க்கவும்-முகமது ஹசான்

வியாழன், 04 செப்டம்பர் 2025 | இரவு 8:06-மலேசியர்கள் அனைவரும் இந்தோனேசியாவில் சமீபத்தில் வெடித்துக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்ட பகுதிகளைத் தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி குடியரசின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்துள்ளன. இருப்பினும், இதுவரை எந்த மலேசியர்களும் பாதிக்கப்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகமும், பெக்கன்பாரு மற்றும் மேடனில் உள்ள துணைத் தூதரகங்களும் தொடர்ந்து பாதுகாப்பு நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“மலேசியர்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியே செல்ல அவசியம் இல்லையெனில் வீடுகளிலோ விடுதிகளிலோ தங்கிக் கொள்ளுங்கள். அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால், அடிக்கடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான பகுதிகளில் மட்டுமே செல்லுங்கள்,” என்று அவர் ரெம்பாவ் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற சிறந்த சேவை விருது (APC) வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 29 அன்று, ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையிலும், மத்திய ஜகார்த்தாவின் செனாயனில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்களை நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக அறிவித்தது.

முகமது ஹசன், ரெம்பாவ் எம்.பி. ஆகிய அவர், தேசிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் கூறுகள் மலேசியர்களை பாதிக்க விடக்கூடாது என்றும் நினைவூட்டினார்.

“அமைதி சீர்குலைந்தால், பொருளாதார வளர்ச்சி தடைப்படும். நிலைமை நிலையற்றதாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டைத் தவிர்ப்பார்கள். அதேபோல் உள்ளூர் முதலீட்டாளர்களும் காத்திருந்து பார்ப்பார்கள். இது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்,” என அவர் எச்சரித்தார்.

அத்துடன், தவறான தகவல்களைப் பரப்பி சமூகத்தை வழி தவறச் செய்வதற்கான முயற்சிகளை மக்கள் எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெர்னாமா

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்