இடைவெளி

இடைவெளி

உயர்ந்து நிற்கிறது இரட்டை கோபுரம்;

அன்னாந்து பார்க்கிறது

தமிழ்ப்பள்ளி………

( மக்கள் ஓசை 2002)

மரித்துப்போன விடியல்

எழுந்து நின்றவர்கள்
இன்னும் உட்காரவேயில்லை.

நாத்து நட்ட வாக்குறுதிகளுக்கு
அறுவடை நாள்… காலண்டரில் இல்லை.

மைக்குகள் எச்சில்களில் கும்மாளம்,

நோட்டுகள் மூட்டை மூட்டையாய் அவிழ்ந்து விழும்.

சத்தியபிரமானக் கைகள்
பசித்திருந்த கண்களைத் தோண்டும் குற்றச் செயல்கள்—
திருத்தி எழுதப்படும் பிழைகள்.

ஒவ்வொரு எழுத்துப் பிழைக்கும்
கட்டணம் கண்ணடிக்கும்.

நாங்கள் கொடுத்த நாற்காலியில்
அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.

எறிவதை மட்டும் கவ்விக் கொள்ள
அதோ… வீசுகிறார்கள்—’நன்றியோடு’

நினைத்த கல்வி நிலைக்குமா?
நிலவைக் காட்டி,
நிலாச்சோறு ஊட்டி
வயிறை அடக்குகிறார்கள்—
மயிரைக் கூட விட்டு வைக்காதவர்கள்.

களைத்தது 
இரவு-பகல்
மரித்துப்போனது  விடியல்.
எங்கள் உழைப்பின் முதுகில் 
இறக்கப்பட்ட கத்திகளின்
குருதி வாடையில் 
அவர்களின்  மீசை வரையப்படுகிறது. 

ஒரு சொட்டுக்காகக் காத்திருக்கும்
வறண்ட தொண்டைகள்,
மழையில் நனைந்து
கொண்டிருக்கிறார்கள். 

செத்துக் கொண்டிருப்போருக்கு
கேட்டுக் கொண்டிருக்கிறது  சாகாவரம்.

சுடிர்மான் தங்கால் 31,
அப்துல் ரஹ்மானின் “மெர்டேக்கா”,
எம்.ஜி.ஆரின் முகமூடி பாட்டு.

மணி 12.00 — வானவேடி!
மெர்டேக்கா வந்தாச்சு
சுதந்திரம் வந்ததா?

“இனியாவது உட்கார நாற்காலியை
கொடுங்கப்பா?”
தள்ளாடிவிட்ட கால்களின்
தவரவிட்ட மனு…

( மலேசிய நண்பன் ஆகஸ்ட்,24, 2025)

மறக்கமுடியலே… மறக்கப்பட்டவர்களால்

வீடு வாங்குன்னு
என் பாட்டி
விட்ட ஒப்பாரி
என் காதுல விழுது…

“பின்” இல்லாதவனுக்கு
பன்னு கூட
“கோட்டா” தானுன்னு
துங்கு காலத்துப்பாட்டிக்கு
புதுப் பாலிசி
எப்படி தெரியும்?

ஒரு கம்பெனி
தொறக்கச் சொல்லி
வியாபாரம் பண்ணுலாம்னு
என் தாத்தா வற்புறுத்தியது
ஞாபகம் இருக்கு…
பூமி புத்திரனின்
ஒழைக்காத ஒறவு
வேணுமுன்னு சொன்னா
சாலை போட்டவருக்கு
ஏறுமா?

எதமறந்தாலும்
தமிழ மறக்காதடா…
அது நம்ம தாய்மொழி…
செத்துப்போன
அப்பன் சொன்னதும்
புத்தியில பதிஞ்சு
கிடக்கு….
வழி வழி
வந்தத
மழிப்பானுன்னு
எஸ்டேட் மேனஜரை
மட்டும் தெரிஞ்ச
அப்பனுக்கு
என்ன தெரியும்…?

ஓட்டு போட்டா
தராசுக்கு போடுவேனு
என் அம்மா
பெரும பட்டுகுட்டு
இருந்ததும்
நெனவுக்கு வருது…

நெகாராக்கு..
பி.ராம்லி படம்…….
மலேசியா கொடி…
மெர்டேகா சத்தம்….
எல்லாத்தையும்
மறக்க முடியலே….
மறக்கப்பட்டவர்களாலே……

( வல்லினம் – இதழ் 13 ஜனவரி 2010)

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்