ஆசியாவில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய பிரதமர் அன்வார் இப்ராஹிம், “மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையே பாலமாக செயல்படும் பொறுப்பு எங்களுக்குண்டு” என்றார்.
தியான்ஜின் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், அமைதியின் உண்மையான அடித்தளம் “கட்டுப்பாடும் பரஸ்பர மரியாதையும்” என்பதை சுட்டிக்காட்டினார். பெரிய சக்திகளின் போட்டி பிராந்தியத்தை இரண்டாகச் சிதறடிக்கக் கூடாது; அதற்கு பதிலாக ஆசிய நாடுகள் “ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உறவு” (interdependence) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முன்னேற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அவரது பார்வையில், இறையாண்மை என்பது நாடுகளின் சுயத் தீர்மானத்தைக் காக்கும் மதிப்பு மட்டுமல்ல; அதே சமயம் வர்த்தகம், முதலீடு, அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றிற்கான திறந்த மனப்பாங்கும் ஆகும். இதுவே எதிர்கால ஆசியாவுக்கான நம்பிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்வாரின் இந்தப் பார்வை, சீனாவுக்கான அவரது நான்காவது அரசுப் பயணத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ளதே குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், இரண்டாம் உலகப்போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் தியனன்மென் சதுக்க அணிவகுப்பிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
அணிவகுப்பைப் பற்றி சிந்திக்கும்போது, “அழகான காட்சிகளைத் தாண்டி, கடந்த பிழைகளை மீண்டும் நிகழாமல் தடுக்கும் வலிமையான சுயக் கட்டுப்பாடே உண்மையான வல்லமை” என அன்வார் சுட்டிக்காட்டினார். நாடுகள் தங்களைத் தாங்களே சிக்கவைக்கும் பாதைகளிலிருந்து விலகத் தெரிந்தால் தான் உண்மையான வலிமை வெளிப்படும் என்பதே அவரது மையக் கருத்து.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *