ஹமாஸ் தளம்” என்ற அமெரிக்க பகுப்பாய்வாளர் குற்றச்சாட்டுக்கு எதிரான மலேசியாவுக்காக ஜடாயுவின் வலுவான குரல்

மலேசியா “ஹமாஸ் தளமாக உள்ளது” என்று முன்னாள் அமெரிக்க பொருளாதார அமைச்சக பகுப்பாய்வாளர் ஜொனதன் ஷான்சர் வெளியிட்ட குற்றச்சாட்டு வெறும் சொல்லாடல் அல்ல. அது மலேசியாவின் இறையாண்மையை இழிவுபடுத்தும் முயற்சியும், நம் பாதுகாப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் சூழ்ச்சியும், பாலஸ்தீன மக்களுக்கான நம் மனிதாபிமான நிலைப்பாட்டை சாய்வாக சித்தரிக்கும் திட்டமும் ஆகும்.
மலேசியாவின் தடம் தானே சாட்சி
மலேசியா எப்போதும் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியுடன் நின்றுள்ளது. நம் காவல் துறை, ஸ்பெஷல் பிராஞ்ச், எதிர்-பயங்கரவாத பிரிவு தொடர்ந்து கண்காணித்து, கைது செய்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. காவல் துறைத் தலைவர் தெளிவாக அறிவித்துள்ளார்: மலேசியாவில் எந்த ஹமாஸ் தளமும் இல்லை. ஆதாரமில்லாமல் இப்படி கூறுவது மலேசியாவின் செயல்முறைகளையே புறக்கணிப்பதாகும்.
அரசியல் ஆதரவு பயங்கரவாதத் தளமா?
பாலஸ்தீன மக்களின் நீதி, சுதந்திர போராட்டத்திற்கு மலேசியா வழங்கும் ஆதரவு அரசியல் மற்றும் மனிதாபிமான நிலைப்பாடு மட்டுமே. இது ஆயுத அமைப்புகளுக்கான படைத்தளம் என்பதற்கு சமம் அல்ல. இந்த வித்தியாசத்தை மறைத்து, தூண்டுதல் நிறைந்த விளக்கமளிப்பதே அந்த அமெரிக்க பகுப்பாய்வாளரின் நோக்கம்.

மேற்கு உலகின் இரட்டை நிலைமை
மனிதாபிமான ஆதரவை அளித்ததற்காக மலேசியாவை “பயங்கரவாத தளம்” என சித்தரிக்கும் மேற்கு பகுப்பாய்வாளர்கள், தாங்கள் நடத்தும் ஆயுத ஒப்பந்தங்கள், பிராக்சி போர்கள் குறித்து அமைதியாக இருப்பது எவ்வளவு இரட்டை நிலைமையோ. உண்மையான சோதனை வேண்டும் என்றால், அவர்கள் முதலில் தங்களது வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
மலேசியாவின் கண்ணியத்தைக் காப்போம்
இது ஹமாஸ் குறித்த குற்றச்சாட்டு மட்டுமல்ல. மலேசியாவின் உலகளாவிய நம்பகத்தன்மையை பாதிக்கும் சூழ்ச்சி. நம் நாடு சாந்தி, கல்வி, வாணிபம், பல்சமூக ஒற்றுமை ஆகியவற்றின் மையமாக இருக்கிறது. அதை “பயங்கரவாத தளம்” என சித்தரிக்க முயல்வது அருவருப்பான சதி.மலேசியா ஹமாஸ் தளம் அல்ல. அது சாந்திக்கும், மனிதாபிமானத்துக்கும், நீதிக்கும் ஆதரவு தரும் தளம். நியாயத்தை ஆதரிப்பது பயங்கரவாதம் அல்ல; அது மனிதம். மூடர்கள் கூட்டம் பேசட்டும். நாம் நாட்டின் கண்ணியத்தைக் காக்கும் காவலனாக நிற்போம்.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *