மலேசியாவில் பாட்டாளி பிள்ளைகளின் கல்வி – கருத்தரங்கு

மலேசியாவில் பாட்டாளி பிள்ளைகளின் கல்வி – கருத்தரங்கு

கட்டுரை-3 தொடரும் உண்மை

மலாயப் பல்கலைக் கழகத்தில் நவம்பர் மாதம் 16-18ஆம் நாட்களில் இந்தக் கருத்தரங்கம் கலைத்துறை வளாகத்தில், நாடு முழுவதிலுமிருந்து மேற்படிப்பை முடித்து பணிபுரிந்துக் கொண்டிருந்த தொழிலாளர் பிள்ளைகள், கல்வி ஆர்வலர்கள், ஆகிய நூறுக்கு மேற்பட்டோர் உட்பட, அன்றிருந்த ஒரே பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழக இந்திய விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோரையும் இணைத்து நடத்தப்பட்டது.

நோக்கம்

நாடு சுதந்திரமடைந்து, பின்னர் மலேசியாவாக மாறிய நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பெரும்பாலும் பாட்டளிகளாக விளங்கிவந்த தமிழ்ப் பாட்டாளிகளின் பிள்ளைகள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கொப்ப தங்களைத் தயார் படுத்திக்கொண்டு மற்ற மலேசியர்களுடன் சம நிலையில் போட்டிப்போட்டு முன்னேற எத்தகைய கல்வியைப் பெற வேண்டும் என்பதை ஆய்ந்து, அதற்கேற்ற மாற்றங்களை முன்மொழிதல் என்பதே முதன்மை நோக்கம்.

மலாய் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மத்தியில் கல்வி சம்பந்தமான பிரச்சனைகள் பல கருத்தரங்குகள் வழி விரிவாக ஆராயப்பட்ட காலம் அது.

கட்டுரைகள்

பல பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் அடைவு நிலைகளைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டாலும், தோட்டத் துண்டாடல் காரணமாக திட்டுத்திட்டாக தமிழ்ப் பாட்டாளிகள் வாழும் நிலை மாறி வேலை கிடைக்கும் மற்ற இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை அனுமானித்ததாலும், தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் பெரும்பாலும் தமிழ்ப் பள்ளிகளில் பயின்று வந்ததாலும், தமிழ்ப் பள்ளிகளின் நிலைமையே பல கட்டுரைகளிலும் மையம் பெற்றது.

அத்துடன் பல்கலைக் கழகத்தில் அன்று படித்துவந்த/பட்டம் பெற்ற பாட்டாளி பிள்ளைகளின் அனுபவமும் எண்ணங்களும் அதிகம் கவனத்தை ஈர்த்தது.

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் அமைத்த பி.பி.என். மாணவர் விடுதி மூன்று ஆண்டுகளுக்கு முன்தான் (1966) பெட்டாலிங் ஜெயாவில் அமைக்கப்பட்டு, பல்கலைக் கழகத்தில் பயின்ற பல தொழிலாளர்களின் பிள்ளைகள் அங்கு தங்கி படித்துவந்தனர்.

முனைவர் இராம சுப்பையா

பி.பி.என். விடுதியின் நிர்வாகியாக அன்று நியமிக்கப் பட்ட மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை விரிவுரையாளராக பணிபுரிந்த முனைவர் இராம சுப்பையா மொழியியல் துறையில் பல தோட்டங்களில் ஆய்வு செய்த அனுபவமிக்கவர்.

அன்றாடம் விடுதியில் மாணவர்களுடன் உறவாடுவார். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிவார். அந்த அடிப்பையில்தான் இந்தக் கருத்தரங்கத்தை நடத்த முன்வந்தார்.

நானும் அதே விடுதியில் தங்கியிருந்ததால், அவருடைய முனைப்புக்கு முழு ஆதரவை கொடுத்து கருத்தரங்க செயலாக்கக் குழுவில் இடம்பெற்றேன்.

தேசிய இந்தியத் தலைவர்கள்

அன்றைய ம.இ.கா. தேசியத் தலைவர், அமைச்சர் டத்தோ வி.தி.சம்பந்தன் (பின்னர் துன்) அவர்கள் இந்த கருத்தரங்கை தொடக்கி வைத்தார். இறுதியில் டத்தோ மாணிக்கவாசகம், ம.இ.கா.வின் துணைத் தலைவர் எனும் முறையில் கருத்தரங்கை முடித்துவைத்தார்.

இடையில் மூன்று நாட்களும் அதிகமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. சில வேளைகளில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

கருத்தரங்கத்திற்கு வந்த பேராளர்கள், பல்கலைக்கழக மாணவர் விடுதியிலேயே தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இரவும் நிகழ்ச்சிகள் இருந்தன. பல்கலைக் கழக மாணவர்களே எல்லா ஏற்பாடுகளையும் செய்து இந்த கருத்தரங்கு வெற்றியடைய வகை செய்தனர்.

கருத்தரங்கத்தின் முக்கிய பரிந்துரை

இக்கருத்தரங்கில் தொழிலாளர் பிள்ளைகளின் கல்வி குறித்து பல பரிந்துரைகள் செய்யப்பட்டாலும், தலையாயது, தமிழ்ப் பள்ளிகளுக்கு மாற்றாக தமிழ் மொழிப் பாடத்தை எல்லா பள்ளிகளிலும் தமிழ் மாணவர்களுக்குக் கட்டாய பாடமாக ஆக்கி, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தையும் சேர்த்து கட்டாயமாக போதிக்கவேண்டும் என்பதாகும்.

நாட்டின் கல்விக் கொள்கையில் இது ஓர் அங்கமாக இருந்தால் எல்லா தமிழ்ப் பிள்ளைகளும் தமிழ் பயில வாய்ப்பு ஏற்படும் என்பதே முக்கிய எண்ணமாக இருந்தது.

அதுவும், நாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை (அன்று) பத்து விழுக்காடாக மட்டுமே இருந்தது. திட்டுத் திட்டாக வாழ்ந்த தமிழர்களுக்கு மட்டுமே தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மற்ற இடங்களில் வாழ்ந்த தமிழர்களுக்கு மற்ற பள்ளிகளே அருகில் இருந்தன என்பதோடு சொந்தமாக தமிழ்ப் பள்ளிகளை நிறுவிக்கொள்ளும் பொருளாதார பலம் அவர்களிடம் இல்லை.

அரசையே நம்பினால், தாய் மொழிக் கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்து, அரசின் தேசியப் பள்ளிகளிலேயே நம் பிள்ளைகளை சேர்க்கலாம் என்பதே எண்ணமாக இருந்தது.

பரிந்துரைக்கு எதிர்ப்பு

இந்தப் பரிந்துரை நாளிதழில் வெளியானபோது, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. தமிழ் நேசன் நாளிதழ் ஆசிரியர் திரு முருகு சுப்ரமணியம் அவர்கள் விவாத மேடை அமைத்து கருத்து பரிமாற்றம் மேற்கொண்டார்.

எனினும் உணர்ச்சி மேம்பட அறிக்கைவிட்ட சிலர் தர்க்கரீதியாக கருத்துகளைச் சொல்ல தவறினர். தமிழ்ப் பள்ளி இல்லையேல் இந்த நாட்டில் தமிழ் மொழியும் பண்பாடும் அழிந்துவிடும் என்பதே அவர்களின் மொத்த வாதமாக இருந்தது. தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை போய்விடும், தலைமை ஆசிரியர் பதவி போய்விடும் போன்ற பயமே தென்பட்டன.

தமிழ்ப் பள்ளிகளில் பயிலாத மற்ற தமிழ் மாணவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மற்ற இடர்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. நம் சமுதாயத்தின் ஆற்றல் தமிழ்ப்பள்ளிகளை தரமான நிலையில் வைத்துக் கொள்ள போதுமானதா என்பதை எண்ணிப் பார்க்கும் பக்குவத்தைக் காணோம்.

பரிந்துரைக்குக் காரணங்கள்

1. தோட்டத் தொழிலாளர்களின் இடம்பெயர்வு

நாட்டில் ரப்பர் தோட்டங்களின் நிலை பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்ததால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாக மாற வாய்ப்பு பெரிதாக இருந்தது. மேலும் தமிழ்த் தொழிலாளர்கள், முதலாளிமார் தற்காலிகமாக கொடுத்துள்ள வீட்டில் வசித்ததால், வேலை இல்லாவிட்டால் வேறு இடங்களில் வேலை செய்யவும், வசிக்கவும் வேண்டும். அவர்கள் மாறும் இடங்களிலெல்லாம் தமிழ்ப் பள்ளி இருக்கும் என்று சொல்ல முடியாது. அருகில் இருக்கும் தேசியப் பள்ளியில் முறையாக தமிழும் சொல்லி கொடுக்கப்பட்டால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அவர்கள் அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை.

2. முதலாளிகளின் ஆதரவின்மை

தோட்ட முதலாளிகள் மத்தியில், அவர்களின் தோட்டங்களிலுள்ள தமிழ்ப் பள்ளிகளை சீரமைத்து பல வசதிகளையும் உள்ளடக்கிக் கொடுக்கும் மன நிலையைக் காணோம். பல குறைபாடுகளுடன் இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பின்னர் அருகிலுள்ள இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் செல்கின்றனர் என்பதுடன், இதனாலேயே பாதியிலேயே படிப்பை நிறுத்திக் கொள்ளும் பழக்கம் நம் மாணவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

3. குறைந்த மாணவர் எண்ணிக்கை

பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளில் பயின்றுக்கொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை சிறிதாக இருந்ததால், ஒவ்வொரு வகுப்புக்கும் தனி ஆசிரியர் இல்லாமல் ஒரே ஆசிரியர் இரண்டு-மூன்று வகுப்புகளை நடத்தவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த முறையால் முழுமையான கற்றல்-கற்பித்தல் நடக்க இயலாத நிலைமை இருந்தது.

4. மொழித் திறன் குறைவு

தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் சேரும்போது, அவர்களின் மலாய்-ஆங்கில மொழித் திறன் மிகக் குறைவாக விளங்கியது. இந்த பலவீனம் இடைநிலைப் பள்ளியில் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

5. பொருளாதார பலமின்மை

இந்த நாட்டில், தமிழ்ப் பள்ளிகள் பெரும்பாலும் பாட்டாளிகளையே நம்பியிருப்பதால், தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில்கூட சொந்த நிலத்தில் பள்ளிக் கட்டடங்களை நிறுவி, இந்நாட்டு சீனர்களைப் போல், தரமான தளவாடங்களுடன் பள்ளியை நடத்தும் ஆற்றல் நம் சமுதாயத்திற்கு இல்லை. அரசாங்கம் அல்லது முதலாளியை நம்பியே இவர்கள் இருந்தார்கள்/ இன்றும் இருக்கிறார்கள்.

6. தொடக்கநிலை மட்டுமே

தொடக்கநிலைப் பள்ளிகள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளாக இருக்கின்றன. இந்த மாணவர்கள் தேசிய இடைநிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே செல்லமுடியும். அதற்கு, தொடக்க நிலையிலிருந்தே தேசியப் பள்ளியில் படிக்கலாமே. புகுமுக வகுப்பில் ஓராண்டை செலவழிக்கத் தேவையில்லையே. சீனப் பிள்ளைகளுக்கு இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும்போது தேசியப் பள்ளியின் புகுமுக வகுப்பு வழி அல்லது சீன மொழியைப் பயன்படுத்தும் சீன இடைநிலைப் பள்ளிகள் வழி என இரு தேர்வுகள் உண்டு என்பதை நாம் மறக்கலாகாது.

7. சிறுபான்மை மக்கள் தொகை

நம் மக்கள் எண்ணிக்கை சிறியது. நம்மவர்கள் வாழும் ஒவ்வோர் இடத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இருக்கப் போவதில்லை. எல்லா தமிழர்களுக்கும் ஏற்ப ஒரு முடிவு எடுக்கப்பட்டால்தான், வரும் காலத்தில் நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அருகிலுள்ள தேசியப் பள்ளியிலேயே தாய்மொழிக் கல்வியையும் பெறும் வாய்ப்பை பெறலாம்.

8. அரசின் பொறுப்பு அவசியம்

சீனர்களைப் போல் கல்விக்காக பொருள் சேர்த்து பள்ளிக்கட்டடங்களையும் தளவாடங்களையும் உரிய இடங்களில் உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை. அரசாங்கம் நமக்கு வசதிகளைச் செய்துத் தரவேண்டுமானால், தேசிய நீரோட்டத்தில் நாமும் சேர்ந்து பயணிக்கவேண்டும். நமது மொழி/இலக்கியம் தேசியப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுவதை உறுதிசெய்வதே நம் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

9. சட்டக் கொள்கை சிக்கல்

தாய் மொழிப் பாடம் பதினைந்து மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டால் மட்டுமே தேசியப் பள்ளிகளில் போதித்துக் கொடுக்கப்படும் எனும் கொள்கையை மாற்றி, ஒரு தமிழ் மாணவன் இருந்தாலும் அங்கு தமிழ் சொல்லி கொடுக்கப்படும் எனும் கொள்கை மாற்றத்தை ஏற்படுத்த, நாம் தமிழ்ப்பள்ளிகளை தியாகம் செய்யவேண்டும். இந்தக் கொள்கை செயலாக்கப் பட்டால் எல்லா தமிழர்களும் பயன்படுவார்கள் – தமிழ்ப் பள்ளிகளுக்கு மட்டும் நாம் அழுத்தம் கொடுக்கும்வரை தேசியப் பள்ளிகளில் தமிழ் மொழி போதனை ஏனோதானோ என்றிருப்பதை தவிர்க்கமுடியாது. காரணம் நம் சமுதாயத்தின் கவனம் முழுவதும் தொடக்கநிலைத் தமிழ்ப் பள்ளிகளைச் சுற்றியே வருகிறது.

10. “Uneconomic Schools” பிரச்சனை

பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகள் சிறிய எண்ணிக்கை மாணவர்களைக் கொண்டிருப்பதால் அவற்றை (uneconomic schools) அதிக செலவினப் பள்ளிகளாகவே கருத முடியும். சராசரியாக ஒரு மாணவனுக்காக அரசாங்கம் செலவிடும் தொகை இத்தகைய பள்ளிகளில் கூடும். எனவே இயன்றவரை இத்தகைய பள்ளிகள் அரசியல்/சமுதாயத் தேவைக்காக பெயரளவில் இயங்கினாலும் அவற்றை மேம்படுத்தும் முயற்சிகள் குறைவாகவே இருக்கும். இதை நாம் மறக்கலாகாது.

இந்திய அரசியல் தலைவர் நிலை

இப்படி பல காரணங்களைக் கூறி பரிந்துரைகளை மலேசிய இந்தியர்களின் சார்பில் முடிவெடுக்கும் இடத்திலிருந்த அரசியல் தலைவரிடத்தில் கொடுத்தோம்.ம.இ,கா. தலைவரிடம் பரிந்துரைகளைக் சமர்பிக்கும் பொழுது, கல்வி சம்பந்தமான முடிவுகளை வருங்கால சந்ததியினரின் மேம்பாட்டிற்காகவும், மலேசியாவிலுள்ள எல்லா இனங்களுடன் இணைந்து வாழ்ந்து பணிபுரியும் பக்குவமுள்ள இனமாக நம் இனத்தை உருவாக்கவும் இத்தகைய மாற்றம் தேவை என்பதையும், பரிந்துரைகளை நன்கு பரிசீலனை செய்து அரசிடம் கொண்டு செல்லும் பொறுப்பை அவரிடம் கொடுத்தோம்.

அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். நல்ல கருத்து பரிமாற்றம் இருந்தது. எனினும், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, (துன்) டத்தோ சம்பந்தன் எங்களிடம் அன்பாகக் கூறியது, மலேசிய சீனர்கள் இத்தகைய பரிந்துரைகளை ஏற்க மாட்டார்கள் என்றும் நாமும் அவர்களுடன் இருப்பதுதான் சிறந்தது என்றும் எங்களிடம் சொல்லி எல்லா கருத்து பரிமாற்றங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்!

கருத்தரங்கின் தாக்கம் அதிகமில்லை

ஆர்வமுடன் தலைவரைக் காணச்சென்ற கருத்தரங்குக் குழுவினர் இத்தகைய பதிலைக் கண்டு, இதற்குமேல் கல்விக் கொள்கை அடிப்படையில் மாற்றம் செய்ய மனு செய்யும் நிலையில்கூட நாம் இல்லை என்பதை அறிந்து, இதைப்பற்றி அதிகம் பொதுவில் விவாதிக்கவில்லை.

ஆர்வமுடன் கலந்து கருத்தரங்கை வெற்றியடையச் செய்த பலர் அதன் பின் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டனர். இன்று அவர்களில் பலர் நம்முடன் இல்லை.

எனினும் இந்த கருத்தரங்கத்தின் தொடர்ச்சியாகத்தான் (டான் ஸ்ரீ) முனைவர் தம்பிராஜா ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை நிறுவினார். EWRF அமைப்பும், பின்னர் இராம சுப்பையா கல்வி உபகாரச் சம்பள வாரியமும் தொடங்கப்பட்டன. இந்திய மாணவர்களுக்கு இவை பலவகைகளில் இன்றுவரை சேவையாற்றி வருகின்றன.

உருமாற்றம் கொண்டுவர தலைவர்கள் இல்லை

நம் அரசியல் தலைவர்கள் நம் மலேசியத் தமிழர்களின் மேம்பாட்டுக்கு சுயமாகச் சிந்தித்து மாற்றங்களைக் கொண்டுவருவதில் முன் நிற்கும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

இருக்கும் நிலையிலேயே இருந்துகொண்டு குளிர் காய்வது சுலபம் – குறிப்பாக சிறுபான்மையாக இருக்கும் நம் சமுதாயத்தில் இப்படி குளிர் காய்வது சுலபம் என்பதை பல தலைவர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

குறிப்பாக எந்த நாடாளுமன்ற/சட்டமன்ற தொகுதியிலும் இந்திய வாக்காளர்களை மட்டும் நம்பி தேர்தலில் நிற்க முடியாத நிலையில், மூத்த கட்சித் தலைவர்களின் கருத்துக்கேற்ப நடந்துகொண்டால்தான் தேர்தலில் நிற்கும் வாய்ப்பே கிடைப்பதால், அத்தகைய வாய்ப்பையே பெரும்பாலான இந்தியத் தலைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு தேடுகின்றனர்.

உருமாற்றம் கொண்டுவருவதாகச் சொல்வார்கள். ஆனால் அவர்களின் செல்பாடுகள் அத்தகைய உருமாற்றத்தைக் கொண்டுவராது!

சிங்கப்பூர் நிலை

சிங்கையில் நம் நாட்டைபோல் ஆங்கில, சீன, மலாய், தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மலேசியாவிலிருந்து சிங்கை பிரிந்தபின், இந்த நான்கு மொழிப் பள்ளிகளையும் இணைத்து ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்ட தேசிய பள்ளிகளை உருவாக்க 1978 ஆம் ஆண்டு கோ கிம் சுவீ கல்வி அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1984 ஆம் ஆண்டு அது முழுமையாக செயலாக்கப்பட்டது.

தமிழ் மொழி/இலக்கியம் இத்தகைய தேசிய பள்ளிகளில், எல்லா நிலைகளிலும் போதிக்கப்படுகின்றது.

பள்ளிகளில் அனைவரும் சிங்கப்பூரின் குடிமக்களாக ஒரே கூரையின்கீழ் அவரவர் தாய் மொழியைக் கற்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

1967 ஆம் ஆண்டு நாங்கள் நடத்திய பாட்டாளி பிள்ளைகளின் கல்வி கருத்தரங்கில் நாங்கள் மலேசியத் தமிழர்கள் சார்பாக கொடுத்த பரிந்துரையை இது ஒட்டியுள்ளதை கவனிக்கலாம்!

மலேசிய சீனத் தலைவர்களின் தன்மை

மலேசிய சீனத் தலைவர்கள் தங்களின் மொழிக்காகவும் சொந்தப் பள்ளிக்கூடங்களுக்காகவும் திடமாக நின்று போராடாமல் இருந்திருந்தால் நாட்டின் தேசியக் கல்விக் கொள்கையில் சீன-தமிழ்ப் பள்ளிகளின் நிலைமை கேள்விக் குறியாகவே போயிருக்கும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

அவர்களின் போராட்டதின்வழி நமக்கும் அதே உரிமை/சலுகை கிடைத்துள்ளது.

என்றாலும், மலேசிய சீனர்களின் நிலையுடன் நம் நிலையை உண்மையிலேயே ஒப்பிட முடியுமா?

அடுத்த கட்டுரையில் ஒரு சிறு ஒப்பீடு செய்துதான் பார்ப்போமே!உண்மை தொடரும்

*தொ.க. நாராயணசாமி,
16 செப்டம்பர் 2025,மலாக்கா

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்