மலேசியாவில் சீனர்களும் இந்தியர்களும் ஓர் ஒப்பீடு எனும் தலைப்பின் பகுதி 2 கட்டுரையை இனி பார்ப்போம்
கட்டுரை 4- தொடர்ச்சி
செட்டித் தோட்டங்கள்
பல தோட்டங்கள் செட்டியார்கள் கைக்கு மாறிய சமயம், அங்கு பெரும்பாலும் தமிழ் தொழிலாளர்களே பணிபுரிந்தனர். நான் பிறந்து வளர்ந்த இடத்திலும் செட்டித் தோட்டங்கள் இருந்தன. தொழிலாளர்களுக்கான வீடும் வசதிகளும், ஆங்கிலேயார் வசமிருந்த தோட்டங்களில் காணப்பட்டவையை விட மோசமான நிலையில் இருந்ததோடு, தொழிலாளர்களை அடிமைகள் போல் நடத்தினர் என்பதையும் கண்கூடாகக் கண்டேன்.
நாடு சுதந்திரம் அடையும் பொது, அவசரமாக செட்டியார்கள் தங்கள் தோட்டங்களை பெரும்பாலும் சீனர்களிடம் விற்றுவிட்டு தங்கள் தாய்நாடு செல்வதில் குறியாக இருந்தனர். செட்டியார்களின் செல்வம் இந்நாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு எத்தகைய பலனையும் கொடுக்கவில்லை.
எல்லா மலேசிய இந்தியர்களும் ஓர் இனமா?

இந்தியர்கள் பல பிரிவுகளாக வந்தார்கள். இன்றுவரை அந்தந்த பிரிவுகளிலேயே இருக்கிறார்கள். ஆங்கிலம் படித்தவர்கள் ஒரு பிரிவு. தொழிலாளர்கள் நிறைந்த இடங்களில் தமிழ்ப் பள்ளிகளில் படித்தவர்கள் மற்றொரு பிரிவு. இவர்கள் மத்தியில் ஜாதிப் பிரிவுகள் வேறு!
மலையாளிகள், யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றும் தங்களின் தனித்தன்மையுடன் வாழவே விரும்புகின்றனர். தவிர்த்து சமய ரீதியில் தமிழ் முஸ்லிம்கள் பல வணிகத்துறையில் இருந்தாலும், சாதாரண தமிழ்த் தொழிலாளர்களுடன் நெருக்கமாக பயணித்ததில்லை. சமயரீதியாக நம்மவர்கள் பெரும்பாலும் இந்துகளாக இருந்தாலும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று பல மதங்களையும் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். சீனர்கள் சீனப்புத்தாண்டு வரும்போது, எந்த சமயத்தைப் பின்பற்றினாலும் ஒன்று கூடுவதுபோல் நமக்கு ஒரு ஒற்றுமைத் திருநாள் இல்லை! கோயில்களில்கூட, இன்றுவரை செட்டியார்கள் தங்கள் கோயில் நிர்வாகங்களில் வேறு யாரையும் உள்ளே விடமாட்டார்கள்!
மலேசிய இந்தியர்கள் மத்தியில் பிரிவுகள் தொடர்கின்றன

காலனித்துவ காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் இன்றுவரை இந்நாட்டு இந்தியர்களை பிரித்தே வைத்துள்ளன. நகர்ப்புறங்களில் ஆங்கிலக் கல்வி பெற்று பணிபுரிந்தவர்கள் தன்மையும், தோட்டங்களில்/தொழிலாளர் நிறைந்த பகுதிகளில் உடலுழைப்பை நம்பி வாழ்ந்த தமிழர்களின் தன்மையும் வேறாக இருந்தது – இன்றும் மறையவில்லை. இந்தியர்கள் பிரிவில் தமிழர்களுக்கு அப்பால் தெலுங்கர்கள், மலையாளிகள், யாழ்ப்பாணத் தமிழர்கள், வட இந்தியர்கள், சீக்கியர்கள் என பல பிரிவுகள் உண்டு. இவர்கள் ஒத்த தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை. இவர்கள் மத்தியில் தமிழர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்ததாலும், தமிழ்ப் பள்ளிகள் காலனித்துவக் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டிருந்ததாலும், இந்நாட்டில் தமிழ் மொழிக்கு இடம் கொடுக்கப்பட்டது. இதை எல்லா மலேசிய இந்தியர்களும் ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை. தமிழர்கள் மத்தியிலும் மற்ற மொழி பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பழக்கம் தொடர்வதைக் காண்கிறோம். மற்ற இந்தியர்களைப் பற்றி சொல்வதற்கில்லை.
பணம் படைத்த இந்தியர்களும், உயர் பதவிகளில் இருந்தோரும் – தமிழர்கள் உட்பட, பாட்டளித் தமிழர்களுடன் அதிக உறவு கொண்டாடுவதில்லை. இன்று, படித்து பட்டம் பெற்ற தமிழ்ப் பாட்டாளி பிள்ளைகளும் தங்களின் பெற்றோர் வாழ்ந்த வாழ்வியலை ஒட்டியே வாழ முற்படுவதைக் காணலாம். எனவே தமிழ் மொழி எல்லா இந்தியர்களையும் இந்த நாட்டில் ஒன்று படுத்தும் நிலையில் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மலேசிய சீனர்களின் நிலை

சீனர்கள் பல கிளை மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும், மாண்டரின் மொழியை சீனர்களை இணைக்கும் மொழியாக தெரிவுசெய்து செயல்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளனர். சீனர்கள் மத்தியிலும் ‘குலம்’ (clan) அல்லது ஜாதிகள் உண்டு. அவர்களின் பெயர்களிலேயே அதைக் காணலாம். எனினும் அதன் அடிப்படையில் அவர்கள் வேற்றுமைகளைக் காட்டுவதில்லை. மாறாக ஒவ்வொரு குலத்தைச் சேர்ந்தவர்களும் அமைப்பை ஏற்படுத்தி பல நல்ல உதவிகளை அவர்களின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் செய்கிறார்கள்.
சீனர்களின் பொருளாதாரம்/கல்வி காப்பகங்கள்

எல்லா சீன வணிகர்களும், தொழில் புரிவோரும் இணைந்து அவர்களின் ஒருங்கிணைந்த THE ASSOCIATED CHINESE CHAMBER OF COMMERCE AND INDUSTRY OF MALAYSIA (ACCCIM) வர்த்தக சபையை 2.7.2021 நாளிலிருந்து நடத்திவருகின்றனர். இந்நாட்டில் அறுபது விழுக்காட்டிற்கு மேலான பொருளாதாரத்தை இவர்களின் கைவசம் இருப்பதால், அரசாங்கம் இவர்களுடன் அணுக்கமாக நடந்துகொள்ளும் கட்டாயத்தில் இருப்பதை நாம் அறியலாம். நாட்டில் புதிய வரிகள், நிதி சம்பந்தமான முடிவுகள் செய்யப்படுமுன் இவர்களுடன் கலந்து கொள்வது நிதி அமைச்சுக்கு வழக்கம். காரணம் இவர்கள் நலன் காக்கப்படாவிட்டால் முதலீட்டை வேறு நாடுகளுக்கு இவர்கள் திருப்பிவிடும் அபாயம் உள்ளதை எந்த அரசும் உதாசீனப்படுத்த முடியாது. தலைநகரில் இவர்களின் தலைமை அலுவலகம் கம்பீரமாக வீற்றிருப்பதைக் காணலாம். இங்கு ஆய்வுகள் வழி அவர்களின் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வணிக பழக்க-வழக்கங்களில் புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்புகள், வகுப்புகள் போன்றவற்றை தொடர்ந்து நடத்தி, உணர்த்தி வருகிறார்கள். இதனால் நாட்டில் சீன வணிகர்கள் எப்போதுமே முன்னணியில் இருக்கிறார்கள்.
அதேபோல் DONG JIAO ZONG எனும் கல்வி கூட்டமைப்பு இந்த நாட்டில் சீன மொழிக் கல்வி நலனைப் பாதுகாக்கும் கடமையைச் செய்துவருகிறது. நாட்டிலுள்ள எல்லா சீன பாலர் பள்ளியிலிருந்து, தொடக்கநிலை, இடைநிலை, மற்றும் கல்லூரி வரை கண்காணிக்கவும், மேம்படுத்தவும், இடம் மாற்றவும், கற்றல்-கற்பித்தல் புத்தாக்கங்களை பயிற்சிகள் வழி உரியோருக்கு வழங்கவும், சீனக் கல்வி மையங்கள் நாட்டில் எப்போதுமே முதன்மை நிலையில் இருக்கவும் இந்த அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமையகம் அவர்களுக்குச் சொந்தமான் new era கல்லூரியின் வளாகத்திலிருந்து செயல்படுகிறது.

மலேசிய இந்தியர் வர்த்தக சபை
இன்னாட்டு இந்திய வணிகர்களும் வர்த்தக சபை 30.10.1950 தொடங்க்கி நடத்திவருகின்றனர். பெரும்பாலும் இந்தியர்களைச் சார்ந்தே இவர்களுடைய செயல்பாடுகள் இருக்கின்றன. அனைத்து மலேசியர்களையும் உள்ளடக்கிய நடவடிக்கைகள் குறைவு. அப்படி இருந்தாலும், அவை இந்திய முஸ்லிம்களையும், வட இந்தியர்களையும், அரசியல் ஆதரவுடன் மேல் வந்தவர்களையுமே காட்டுகிறது. சாதாரணத் தமிழர்களை இந்த சபை உயர்த்திவிடும் செயல்களில் ஈடுபடுவது குறைவு. இதனால்தான் நாட்டின் பொருளாதாரத்தில் நம் பங்கு இன்றுவரை இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்து வருகிறது.

நேற்றைய தோட்டம் இன்றைய நவீன நகரம்
நாம் எப்போதுமே இந்த நாட்டின் காடுகளை அழித்து பெரும் தோட்டாங்களை உருவாக்கியவர்கள் தமிழர்கள் என்று சொல்வோம். இன்று இந்த தோட்டங்கள், இந்நாட்டு சீன முதலீட்டுடன், நவீன வீடமைப்புத் திட்டங்கள் வழியும், தொழில் மையங்களாகவும் உருமாறி வருகின்றன. ஒரு காலத்தில் தமிழ் செட்டியார்களிடம் கடன் வாங்கி சொத்துவாங்கிய சீனர்களின் இன்றைய உயர்வை இது காட்டவில்லையா? கடின உழைப்பு, தரமான கல்வி, பொருளீட்டும் யுக்தி, நல்ல சமூக கட்டமைப்பு ஆகியவையே இத்தகைய வெற்றிப் பாதைக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளன.
மலேசிய சீன அரசியல்வாதிகளின் செயல்பாடு

சீன வர்த்தக சபை/கல்வி அமைப்பு ஆகியற்றை வழிநடத்தும் குழுக்கள் மிக பலம் வாய்ந்தவை. இவர்கள் காட்டும் வழியிலேயே சீன சமூகன் இந்த நாட்டில் பயணிக்கும். எனவே சீனர்களை பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் இவர்களின் பார்வைக்கு அடிபணிந்தே செயல்படுகின்றன. ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் இருக்கும் கட்சி, அமைச்சரவையிலிருந்து சீனர்களின் நலன் காக்கும் பொறுப்பை வகிக்கும்போது, எதிர்தரப்பில் இருக்கும் சீனர் சார்ந்த கட்சி குறைகளை வெளியிலிருந்து வெளிப்படுத்தி அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதை அருமையாக இந்த சமூகம் அமைத்துக் கொண்டுள்ளது. இந்த சாணக்கியம் உண்மையில் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நம் நிலை

எந்த வகையிலும் நாம் நம்மை இந்நாட்டுச் சீனர்களுடன் ஒப்பிட முடியாது. நாம், ஆங்கிலேயர் ஏற்படுத்திய வட்டத்திற்குள், சற்று அதிக வருமானத்துடனும், கல்வி அடைவு நிலையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் மத்தியில் மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம். நமக்கு வேண்டிய அனைத்தையும் அரசாங்கமே செய்து கொடுக்கும் என்று தொடர்ந்து கனவு கண்டு வருகிறோம். நம்முடைய வாக்குகளைப் பெற, அரசாங்கமும் சில இந்தியர்களுக்கான திட்டங்களை அறிவிக்கின்றன. நம்மை பிரதிநிதிக்கும் அமைப்புகள் கொடுக்கப்படும் நிதிக்காக போராடி பெறுகின்றன, பெறும், பெறப்போகின்றன. ஆனால் நம் கட்டமைப்பை மாற்றி, உருமாற்றத்தைக் கொண்டுவர இத்தகைய உதவிகளால் முடியாது. மிகுந்த ஏழைகளுக்கு இத்தகைய உதவி பயன்படுமேயொழிய மொத்த தமிழர்களின் நிலையை உயர்த்தாது.
சமுதாய அளவில் நமக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. எனினும் நாம் அவற்றைப்பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. மாறாக நம் தமிழ்ப் பள்ளிகளின் நிலைமையையே நாம் முன்னிலை படுத்தி போராடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தையே மாற்றங்களைக் கொண்டுவரச் சொல்கிறோம். இந்தப் பள்ளிகளை சீனப் பள்ளிகளின் தரத்திற்கு வேண்டாம், தேசிய பள்ளிகளின் தரத்திற்காவது கொண்டுவர முடியுமா?
அடுத்த கட்டுரையில் இதை பார்ப்போம்!
பத்தியாளர்,
தொ.க. நாராயணசாமி, மலாக்கா
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *