தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்.

தொடர்ந்து அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்.

கோலாலம்பூர், செப். 3 — மலேசிய இளைஞர்களிடையே வேலைஇன்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட வேலை இழந்த இளைஞர்கள் 270,800 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே காலாண்டில் 286,500 ஆக உயர்ந்துள்ளனர்.

அவர் கூறியதாவது, வேலைஇன்மை பிரச்சினையைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) திட்டங்களை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து அரசு முன்னெடுத்து வருவதாகவும் விளக்கினார்.

அந்த அமைப்புகளில் TalentCorp, மனிதவளத் துறை (JTM), திறன் மேம்பாட்டுத் துறை (JPK), சமூகப் பாதுகாப்பு அமைப்பு (SOCSO) மற்றும் HRD Corp ஆகியவை அடங்கும். TalentCorp 2015 முதல் மலேசியாவின் முக்கிய தொழில்களின் பட்டியலை (MyCOL) வெளியிட்டு, வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகள் மற்றும் முக்கிய திறன்களை ஆராய்ந்து வருகிறது. அதோடு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் வேலைவாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் MyMAHIR.my எனும் டிஜிட்டல் போர்டல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது எதிர்கால வேலைவாய்ப்புகள், அவற்றிற்கு தேவையான திறன்கள் மற்றும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி திட்டங்களை வழங்கும் மையமாக செயல்படுவதாகவும் சிம் கூறினார். மேலும், தொழில்துறைக்குத் தேவையான பயிற்சிகளைத் தீர்மானிக்கும் நோக்கில் MyMAHIR எதிர்காலத் திறன்கள் திறமை கவுன்சில் (FSTC) நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களிடையே 10.8 சதவீத வேலைஇன்மை விகிதம் மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்கள் தகுதிக்கு ஏற்ப வேலை செய்ய முடியாத நிலையைத் தீர்க்க அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செனட்டர் டத்தோ சலேஹுதீன் சைதினின் கேள்விக்குப் பதிலளித்தபோது, சிம் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, திறன் மேம்பாட்டுத் துறை (JPK) தற்போதைய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தேசிய தொழில் திறன் தரநிலைகளை (NOSS) திருத்தி வருகிறது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சைபர் பாதுகாப்பு, தொழில்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகள் அடங்கும். 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,972 NOSS தரநிலைகள் நடைமுறைக்கு வரும் என்றும், 1,625 அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் நாட்டளவில் பயிற்சி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்கள் உட்பட வேலை தேடுபவர்கள் வேலை சந்தையில் நுழைய உதவும் வகையில், மனிதவளத் துறை (JTM) திறன் மேம்பாடு மற்றும் மறு திறன் திட்டங்கள் மூலம் பல்வேறு படிப்புகளை வழங்கி வருவதாகவும் சிம் குறிப்பிட்டார்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்