தேசிய கல்விக் கொள்கையும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும்

தேசிய கல்விக் கொள்கையும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும்

சுதந்திர நாட்டிற்கான கல்விக் கொள்கையின் தோற்றம்

மலாயா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை உருவானது. அதுவரை ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்கீழ் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ்/தெலுங்கு ஆகிய மொழிகளில் பள்ளிகள் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டன. ஆனால் அவை ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒவ்வொரு மொழிப் பள்ளியும் தனித்தனி பாடத்திட்டங்களுடன் இயங்கின. பாடநூல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தே வந்தன.

தேசிய மொழியான மலாய் மொழிக்கு முக்கியத்துவம்

சுதந்திர மலாயாவில் மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டே கல்விக் கொள்கை அமையவேண்டும் என்பதில் மலாய் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் வலியுறுத்தின. அதேசமயம், சீனர்கள் தங்களது பள்ளிகளை சொந்த கட்டடங்களிலும், சொந்த ஆசிரியர்களின் மூலமும், சீன மொழிப் பாடத்திட்டத்தோடும் நடத்தியதால், அவர்கள் சீன மொழிக்கும் கல்விக் கொள்கையில் இடம்தேவையென கோரினர்.
தமிழ்ப் பள்ளிகள் பெரும்பாலும் தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டன. நகரங்களில் சில தனியார் முயற்சிகளால் மட்டுமே இயங்கின. இருப்பினும் தேசிய அளவில் இப்பள்ளிகள் காலனித்துவ கல்வி இலாகாவின்கீழ் இருந்தன. இந்திய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும், சீன மொழியைப்போல் தமிழ் மொழியும் மலாயா கல்விக் கொள்கையில் இடம்பெறவேண்டும் எனக் கோரிக்கை வைத்தன.

சீனப் பள்ளிகளின் கட்டமைப்பு

சொந்த கட்டடங்கள், பாடத்திட்டம், தேர்வுக் கழகம் என தனித்தனி கட்டமைப்பைக் கொண்டிருந்த சீன அமைப்புகள் அழுத்தம் கொடுத்ததால், மலாயா தேசிய கல்விக் கொள்கை உருவாக தாமதமாயிற்று. நாடு சுதந்திரம் பெற்ற பின் சில ஆண்டுகள் கழித்தே கல்விக் கொள்கை வரைவு முடிவடைந்து செயலாக்கம் கண்டது.

ரசாக் அறிக்கை

மலாயா கல்விக் கொள்கை அறிக்கையை அன்றைய கல்வி அமைச்சர் துன் அப்துல் ரசாக் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வரைந்தது. 1956 இல் இந்த ரசாக் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பார்ன்ஸ் அறிக்கையும் (Barnes Report), பென் வூ அறிக்கையும் (Fenn Wu Report) ஒன்றிணைத்த வடிவமாகும். காரணம், பார்ன்ஸ் அறிக்கை மலாய்க்காரர்களுக்கே ஏற்றதாகவும், பென் வூ அறிக்கை சீன, இந்தியர்களுக்கே ஏற்றதாகவும் அமைந்ததால், இரண்டையும் இணைத்து ரசாக் அறிக்கை உருவாக்கப்பட்டது.

பள்ளிகளில் மொழிக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை மலாய் மொழிக்கு முதன்மை இடமும், ஆங்கிலத்துக்கு இரண்டாம் மொழி இடமும், சீன-தமிழ் மொழிகளுக்கு தாய்மொழி உரிமையும் வழங்கியது. ஆரம்பத்தில், ஆங்கிலப் பள்ளிகள் பத்து ஆண்டுகள் வரை ஆங்கிலத்தைப் போதனமொழியாகத் தொடர அனுமதிக்கப்பட்டன. பின்னர் அவை மலாய் மொழியைப் போதனமொழியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சீன-தமிழ் தொடக்கநிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மலாய் இடைநிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது, ஒரு ஆண்டு “புகுமுக வகுப்பில்” பயின்ற பின் மட்டுமே அடுத்த தரத்திற்கு செல்ல முடியும் என விதிக்கப்பட்டது. இதன் நோக்கம், மலாய் மொழித் திறனை வலுப்படுத்துவதாகும். இதே போன்று, ஆங்கில இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்றபோது முன்பு ஆங்கில திறனை வலுப்படுத்தும் முறையே பின்பற்றப்பட்டதால், அதனை மலாய் மொழிக்கும் பொருந்தும் விதமாக மாற்றினார்கள்.
இடைநிலைப் பள்ளிகளில், குறைந்தபட்சம் 15 மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தால் தமிழ்-சீன மொழிகளை கற்பிக்கலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய பாடத்திட்டம்

தேசிய பாடத்திட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், ஆங்கில, சீன, தமிழ் பள்ளிகள் “தேசிய வகைப் பள்ளிகள்” (National-Type Schools) என வகைப்படுத்தப்பட்டன. முழுமையாக மலாய் மொழியைப் போதனமொழியாகக் கொண்ட பள்ளிகள் மட்டுமே “தேசியப் பள்ளிகள்” ஆகக் கருதப்பட்டன.
சீன, தமிழ்ப் தொடக்கநிலைப் பள்ளிகள் அனைத்தும் தேசிய வகைப் பள்ளிகளாக மாறின. இதனால் அவை அரசாங்க மானியங்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என கல்வி அமைச்சின் நிர்வாகத்தின்கீழ் இயங்க ஆரம்பித்தன. தொடக்க நிலை மட்டுமே தாய்மொழியில் கற்பிக்க அனுமதி இருந்ததால், இந்த ஏற்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

தனியார் சீனப் பள்ளிகள்

தனியார் சீன இடைநிலைப் பள்ளிகள் மாண்டரின் மொழியைப் போதனமொழியாக வைத்திருந்தன. இவை தேசிய வகைப் பள்ளிகளாக மாறினால், மலாய் மொழியைப் போதனமொழியாகக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சீன அமைப்புகள், ஒவ்வொரு மாநிலத்திலும் சில பள்ளிகளைத் தனியார் பள்ளிகளாக வைத்துக் கொண்டு, மீதியைக் தேசிய வகைப் பள்ளிகளாக மாற்றிக் கொண்டன.
அதேநேரத்தில், கிறிஸ்தவ அமைப்புகளின்கீழ் இயங்கிய ஆங்கிலப் பள்ளிகள் போல, பள்ளி நிலம், கட்டடம் ஆகிய சொத்துக்கள் தனிப்பட்ட உரிமையாளர்களிடமே இருந்து வந்தன. இன்றும் அவை அப்படியே உள்ளது. கல்வி அமைச்சு நிர்வாகம் மட்டும் கவனித்தாலும், கட்டட விரிவாக்கம், பழுது பார்த்தல் போன்ற செலவை பள்ளி வாரியமே மேற்கொள்கிறது. அரசாங்க மானியங்கள் சூழ்நிலைக்கேற்ப வழங்கப்படுகின்றன.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழ்ப் பள்ளிகள் தேசிய வகைப் பள்ளிகளாக முழுமையான அரசாங்க ஆதரவுடன் இயங்குகின்றன. சில பள்ளிகள் தனியார் நிலங்களில் இருந்தாலும், கல்வி அமைச்சு நிர்வாகச் செலவையே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் கட்டட விரிவாக்கம், பழுது பார்த்தல், அல்லது பள்ளி மாற்றம் போன்ற பொறுப்புகள் பள்ளி வாரியத்திற்கே உரியது. அனுமதியை வழங்குவது மட்டுமே கல்வி அமைச்சின் பொறுப்பு. அரசியல் காரணங்களுக்காக சிறு அளவில் மானியங்கள் வழங்கப்படுவது காணப்படுகிறது.
இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான், இன்றைய தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

பாட்டாளிப் பிள்ளைகள் பற்றிய கருத்தரங்கு

டாக்டர் இராமசுப்பையா

நான் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, டாக்டர் இராம சுப்பையா தலைமையில் “பாட்டாளிப் பிள்ளைகளின் கல்வி” என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. குறிப்பாக, நாட்டின் பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளில் பாட்டாளி மக்களின் பிள்ளைகளே அதிகம் பயின்றதால், அவற்றின் நிலைமையை மையப்படுத்தியே விவாதங்கள் நடந்தன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இந்தக் கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவுகளையும், அவற்றின் தாக்கங்களையும் அடுத்த கட்டுரையில் காணலாம்- தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுத்தாளர் சுயவிவரம்

தொ.க. நாராயணசாமி

மலாக்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ஆய்வாளரும் ஆவார். மலாய் மொழியில் பாண்டித்துவம் பெற்ற இவர், கல்வித் துறையில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவர். அறிவுப் புலத்தில் பெற்றுள்ள ஆழ்ந்த பின்புலம் இவரை சமூக ஆராய்ச்சி, கல்வி வளர்ச்சி, மற்றும் கலாச்சார உருமாற்றம் ஆகிய துறைகளில் செயல்படத் தூண்டியுள்ளது.

மலாக்கா தமிழர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியதோடு, மலாக்கா இந்து ஆலயங்களின் வரலாற்று வளர்ச்சி, மதச்சார்பற்ற சமூக பங்களிப்பு, மற்றும் உள்ளூர் சமூகத்தின் கலாச்சார அடையாளங்களை ஆராய்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவரது ஆய்வுகள், ஆலயங்கள் மத நம்பிக்கையின் மட்டுமல்லாமல் கல்வி, சமூக ஒற்றுமை, மற்றும் பண்பாட்டு பாரம்பரிய வளர்ச்சிக்கும் மையமாக இருந்ததை வெளிக்கொணர்கின்றன.

சமூக உருமாற்றம், கல்வி முன்னேற்றம், மற்றும் அடிமட்ட மக்களின் நிலைமாற்றம் ஆகிய துறைகளில் tireless-ஆக (அயராது) செயல்பட்டு வரும் இவர், கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூகப்பணியை ஒருங்கிணைக்கும் சிந்தனையாளர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார். சமூக நலனுக்கான இவரது அர்ப்பணிப்பு, மலாக்காவிலேயே அல்லாது, பரந்த சமூகப் பரப்பிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்