தலையங்கம்: மாணவர்களின் கனவை அறுத்து வீசும் அரசா?

தலையங்கம்: மாணவர்களின் கனவை அறுத்து வீசும் அரசா?

மலேசிய இந்திய சமூகத்தில் தலைமுறைகளாகத் தொடர்ந்து ஒலித்து வரும் வலி – “மருத்துவ படிப்பில் இடமின்மை”. இன்றும் அதே குரல்.

STPM, மெட்ரிகுலேசனில் சிறப்பாகத் தேர்ச்சிப் பெற்று, மதிப்பெண்களில் திகழும் மாணவர்கள், அரசு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களின் விண்ணப்பங்கள் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பி, மாணவர்களின் மருத்துவ எதிர்காலத்தை அறுத்துப் போடுகிறதா அரசாங்கம் ? என்று பாதிக்கப்பட்டவர்களின் குரல் பலமாகக் கேட்கிறது.

“என் மகன் அல்லது மகன் மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அவர்களிடமிருந்து கனவுகளை மட்டுமல்ல, கண்களையும் பறிக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா? என்று உழைத்துத் தழும்பேறியப் பெற்றோர்களின் கோபக் கேள்விகள் எறிந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே நம் நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்தும், மருத்துவம் பயில துடித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ,மருத்துவம் விருப்பமாக நிரப்பினால் வேளாண்மை,பல் மருத்துவம் கேட்டால் விலங்கியல் என்று குரங்காட்டிப் போல நடந்து கொள்ளும் அரசுக்கு மாணவர்கள் சிறப்பாக மதிப்பெண் எடுத்தால் – அதுதான் மிகப் பெரிய தவறு போல.

மஇகா கல்விக் குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதனின் வேதனைக்குரல் கல்விக் குழு கூட்டத்தில் இதையே வலியுறுத்துகிறது –

“ஏழை மாணவர்கள் அரசுப் பல்கலைக்கழகங்களில் கனவை நனவாக்குவார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆச்சரியக் குறியாகவும், குறுக்கே வந்து போகும் பூனையாகவும் அரசு நடந்து கொள்வதாக படிக்கவைத்தப் பெற்றோர்கள் கடிந்து கொள்வது அரசுக்கு விளங்கியிருக்கக் கூடும். இது வரலாறு சொல்லும் வேதனை.இந்தப் பிரச்சினை புதியதல்ல என்கிறது சலித்துப் போன சமூகம்.

1970களில் தொடங்கிய புதிய பொருளாதார கொள்கை-New Economic Policy (NEP) பிறகு, இந்திய மாணவர்கள் உயர்கல்வியில் பின்தள்ளப்பட்டனர் என்றே அடிவாங்கியவர்கள் வலியின் குரல். 1980–90களில் பல மாணவர்கள் STPM-ல் தகுதி பெற்றும், மருத்துவம் கிடைக்காமல் வேறு துறைகளுக்குத் தள்ளப்பட்டனர். “AIMST” பல்கலைக்கழகம் மாற்றுத் தேர்வாக அமைந்தாலும் அங்கேயும் அனைவருக்கும் சாத்தியமில்லாத கட்டணத்தால் கட்டுப்பட்டது.இன்று மதானி அரசு-“Malaysia Madani” இந்தப் பிரச்சினைக்குச் சாமர்த்தியமாக சமத்துவ பதிலைத் தருகிறது. ஆனால் சமத்துவத்தின் வாசலில் இந்திய மாணவர்கள் அன்று முதல் இன்று வரை காத்திருக்கிறார்கள். அவர்களுடன் பெற்றோர்களும் நரை விழுந்த மயிருடன் உடன் காத்துக் கொண்டிருகின்றனர்

இது முடிவே இல்லாத குடும்பப் பிரச்சினையா அல்லது அரசியல் சதுரங்கமா?

ஏன் இன்னும் தீர்க்க முடியவில்லை?

1.கோட்டா-Quota முறை – தகுதி இருந்தாலும் இடம் கிடைக்காத நிலை.

2. அரசியல் பலவீனம் – MIC பல தலைமுறைகளாகக் குரல் கொடுத்தாலும், வலிமையான அழுத்தம் இல்லை.

3. வெளிப்படைத் தன்மை-Transparency குறைவு – UPU தேர்வு முறையில் இனவாத அடிப்படை- racial bias குற்றச்சாட்டு நீண்ட நாள் முழக்கமாக இருந்து வருகிறது.

மருத்துவர்கள் ராஜினாமா

கடந்த 5 ஆண்டுகளில் 6,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசு துறையில் இருந்து விலகியுள்ளனர்” என்று சுகாதார அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் துஸ்கெஃப்லி அஹ்மது கூறினார். (Astro Awani)2019 முதல் 2023 வரையிலான காலத்தில் 6,417 மருத்துவர்கள் (நிரந்தரமும், ஒப்பந்தமும்) பதவி விலகினர். அதில் 1,046 நிபுணர் மருத்துவர்களும் அடங்குவர்; இவர்களில் 63 பேர் முன்கூட்டியே ஓய்வு பெற்றனர். (Utusan Malaysia)

மாணவர்களின் உழைப்பும் கனவும் சமூக அநீதி

இந்திய மாணவர்கள் கேட்கிறார்கள்: “சமத்துவம் எங்கே?எங்கள் கரங்கள் மலேசியர்களின் உயிருக்குச் சேவை செய்ய காத்திருக்கிறது. ஆனால் எங்களைத் தேர்வு செய்யும் அரசு யாருக்காகக் காத்திருக்கிறது?” என்று கேட்கும் மாணவர்களின் பிரச்சனை தீர்வு இன்றி தொடர்ந்தால், இது கல்விச் சிக்கல் அல்ல – சமூக அநீதியின் சின்னமாகவே பார்க்கப்படும்.

அரசியல் சொகுசுகளுக்கு இந்தப் பிரச்சினையை கிடப்பில் போடுவது அரசுக்குத்தான் பலவீனம். கேட்பவர்கள் எதுவும் இல்லாதவர்கள் அல்ல. அரசு நடத்தும் கல்விச் சோதனையில் சிறப்பாக வென்றவர்கள். மருத்துவம் என்பது உயிர்-வலி சம்பந்தப்பட்டது. சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கத் தவறினால் வலிக்கும் மரணம் இனம் பார்க்காது. இதனை அரசாங்கம் நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டால் மருத்துவர்கள் பற்றாக்குறை நீடிக்காது.இந்தியர்கள் நன்றி மிக்கவர்கள் அவர்களைக் கெஞ்ச விடாதீர்கள். பிறகு நாம் கெஞ்சும் நிலைமைக்குத் தள்ளப்படுவோம்.

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்