பினாங்கு, செப். 11 –
நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, அவற்றின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) வலியுறுத்தியுள்ளது.
CAP தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கூறுகையில், இந்த ஆண்டு உலகளவில் நடைபெறவுள்ள பசுமை புரட்சி வாரம் 2025-இன் கருப்பொருள் “நெகிழியில் உள்ள நச்சுகள் – நெகிழியிலிருந்து விடுபடுவது எப்படி?” என்பதாகும். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் முதல் நவம்பர் வரை பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படவுள்ளது.
“நாம் சுவாசிக்கும் காற்றிலும், குடிக்கும் நீரிலும், உணவிலும் நுண்ணிய நெகிழித் துகள்கள் உள்ளன. நெகிழிப் பைகள் சிதைவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அவற்றின் கழிவுகள் கடல் மற்றும் நிலவளங்களை மாசுபடுத்துவதோடு, ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களை உயிரிழக்கச் செய்கின்றன,” என்றார் அவர்.
மேலும், நெகிழி உற்பத்தி நிறுவனங்களிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் அருகில் வாழும் மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், மூச்சுக் கோளாறு, செரிமான பிரச்சினை, சிறுநீரகக் குறைபாடு, நோய் எதிர்ப்பு திறன் குறைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, எதிர்கால சந்ததியினரின் நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நெகிழி பயன்பாட்டை நிறுத்தி, ஆரோக்கியமான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்க அனைவரும் பங்களிக்க வேண்டும் என முஹைதீன் அப்துல் காதர் அழைப்பு விடுத்தார்.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *