சமூக மாற்றங்களை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

சமூக மாற்றங்களை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

மலேசியாவில் தமிழ் சமூக மத்தியில் உருமாற்றம் செய்யும் முயற்சிகளில் நம் சமூக அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் தோல்வி கண்டு வருவதை நாம் மறுக்கவியலாது.

இந்த நிலைக்குக் காரணம் நம் தலைவர்களின் அணுகுமுறையில் கோளாறு இருப்பதால்தான் என்பதே என் கருத்து.


களத்தில் இறங்காமல் திட்டமிடுதல்


நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு நம் சமுதாயத்தை மாற்றிவிடலாம் எனும் நினைப்பே மேலோங்கியுள்ளது. எதையெதைச் செய்தால் நம் சமுதாயச் சிந்தனையோட்டத்தையும், நடவடிக்கைகளையும் மாற்றிவிடலாம் என்பதை, நம் அனுபவத்தையும், நாட்டு நடப்பையும் பார்த்து நாமே முடிவெடுக்கிறோம். அதையே நம் திட்டங்களாக வரைந்து அரசாங்க மான்யங்களைக் கோர முற்படுகிறோம். அதற்கு ஏற்றாற்போல் மான்யம் கொடுப்பவர்களும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள், அவர்கள் வரைந்திருக்கும் வட்டத்திற்குள், அவர்கள் கொடுத்திருக்கும் விதிகளுக்கு உட்பட்டு, அவர்கள் தயாரித்திருக்கும் பாரங்களைப் பூர்த்திசெய்து அனுப்பி, பலபேரை சிபாரிசு செய்யச் சொல்லி, மான்யங்களைப் பெறுகிறோம்.


மான்யங்களை செலவு செய்தல்


அப்படி கிடைக்கும் மான்யங்களை செலவு செய்ய நம் அமைப்புக்கு வெகு சுலபமாகிறது. காரணம் நமது திட்டவரைவுபடி நடந்துகொண்டால் போதும். பெரும்பாலும் நாம் மாற்ற விரும்பும் மக்களை ஒரு மண்டபத்திற்கு அழைத்து பேச்சாளர்களையும், தேர்ச்சிபெற்ற வழிகாட்டிகளையும் வைத்து ஒரு சில வாரங்களுக்கு பயிற்சி கொடுப்போம். நல்ல உணவு பரிமாறுவோம். நல்ல தன்முனைப்பு பேச்சாளர்களை பேச வைப்போம். முடிந்தபின் பங்கேற்பாளர்கள் அவரவர் இருப்பிடத்திற்கு, கிடைத்த அறிவுடன் செல்வார்கள். அவர்களின் இருப்பிடத்தில் மாற்றங்களைக் கொண்டுவர பல இடையூறுகள் இருப்பதால், சில வாரங்களில் பழைய பழக்கத்திற்கே அவர்கள் போய்விடுவது இயற்கை. அவ்வளவுதான் திட்டத்தின் பலன்.


நம் திட்டப்படி செலவு செய்து குறிப்பிட்ட காலக் கெடுக்குள் நம் கடமையை முடித்து, கணக்கு, செயல்திட்ட அறிக்கை ஆகியவற்றை அரசு அலவலகத்திற்கு அனுப்பி நம் கடமையை முடித்துக் கொள்வோம்!
திட்டம் போட்டாகிவிட்டது – பணம் கிடைத்தது – செயல்படுத்தியாகிவிட்டது! ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தில் மாற்றத்தைத்தான் பார்க்கமுடியவில்லை. வேலை வாய்ப்புக்காக இளையோரை அழைத்து கொடுக்கும் பயிற்சிகள் இத்தகைய அணுகுமுறையால் வெற்றியடையலாம். ஆனால் சமுதாய மாற்றங்கள் நிகழ முறையான ஆய்வு தேவை!


சமூக ஆய்வு


குறிப்பிட்ட வட்டார சமுதாயத்தின் இன்றைய நிலையை ஆயவேண்டும். அவர்களின் வாழ்க்கை முறை, குடும்ப அமைப்புகள், சமய ஈடுபாடு, பிள்ளை வளர்ப்பு முறை, பிள்ளைகளின் படிப்பு வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், அரசியல் அறிவு, குடும்ப செலவு, பொழுது போக்கு, போன்ற பல கோணங்களில் ஆய்வு செய்யவேண்டும். அங்குள்ளவர்களின் விருப்பு-வெறுப்பை தெரிந்து, எத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட விரும்புகின்றனர் என்பதையும், அவர்கள் தங்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற விரும்புகிறார்களா – எத்தகைய துறைகளில் ஆர்வத்தைக் காட்டுகின்றனர் என்பதையும் கண்டறிதல் நல்லது.


ஆய்வு செய்பவர்கள் சமூக மாற்ற முகவர்களாக (change agent) இருத்தல் அவசியம். காரணம் சமுதாயத்தை மேல் நிலைக்கு மாற்றவேண்டுமானால், நிச்சயமாக மாற்ற முகவர்கள்தான் முன் நிற்க வேண்டும். எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறோமோ, அத்தகைய மாற்றங்களை இந்த குறிப்பிட்ட சமூகம் ஏற்றுக்கொள்ளுமா, அப்படி ஏற்றுக்கொள்ள வைப்பதில் எத்தகைய சிக்கல்கள் உள்ளன, அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்பனவற்றை முன்கூட்டியே ஆய்வாளர் சிந்தித்திருக்கவேண்டும்.


ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் திட்டம் தீட்டுதல்


இத்தகைய ஆய்வின் முடிவில்தான் எத்தகைய திட்டங்களைக் கொண்டு இந்த சமூகத்தில் உருமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை வரைய முடியும்.


நம் சமுதாயத்தில் ஆய்வு செய்ய ஆர்வமில்லை


நமக்குள்ள பிரச்சனை என்னவென்றால் ஆய்வு செய்வது நேரம் பிடிக்கும், ஆய்வு செய்ய சரியான ஆள்/ஆட்கள் வேண்டும், பணம் செலவு செய்யவேண்டும். அரசாங்கம் இத்தகைய தனியார் ஆய்வுகளுக்கு பணம் ஒதுக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாமே இதை ஒரு சமுதாய முன்னெடுப்பாக செய்ய அமைப்புகளின் தலைவர்கள் தயாராக இல்லை. பல இளையோரை இணைத்து களத்தில் இறங்கி செயல்படக்கூடிய அமைப்புகள் அரிது.


அரசியல் கட்சிகளுக்கு, ‘எங்களுக்கு எல்லாம் தெரியும்’ எனும் இறுமாப்பு தெளிவாகத் தெரிகிறது. இந்தியர்/தமிழர்களுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் கள சமூக ஆய்வு செய்து, அதன்வழி சமுதாய உருமாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணம் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


பல பெயர்களில் அரசு மான்யம்


பல பெயர்களில் நம் இன மேம்பாட்டிற்காக பணத்தை ஒதுக்கியிருப்பதாக நம் அரசு அறிவித்துவந்தாலும், பெரும்பாலும் விழலுக்கு இரைத்த நீராகவே போயுள்ளது. அந்தப் பணத்தைப் பெறுவதெப்படி என்வதில் சில அமைப்புத் தலைவர்கள் கிள்ளாடிகளாக வலம் வருவதைக் காணலாம். அடிமட்ட சமுதாயத்தின்மீது உண்மையான் பற்றும் பாசமும் இல்லாதவர்கள், இந்த சமுதாய உருமாற்றத்தில் அதீத அக்கறை கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.


நம் சமூகப் பட்டதாரிகள் எங்கே?


எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. நம்மவர்கள் மத்தியில் ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரி உருவாகிவிட்டதாக நாம் பெருமை கொள்கிறோம். பட்டதாரி என்றால் அடிப்படை ஆய்வு செய்யும் நுணுக்கங்களை படித்து அதன் வழி, மாதிரி ஆய்வைச் செய்திருப்பாரே! அத்தகைய பட்டதாரிகள் அவரவர் வட்டாரங்களில் இத்தகைய கள ஆய்வில் இதுவரை ஈடுபடவில்லை? சமுதாயப் பற்று எங்கே போயிற்று? அல்லது மாதிரி ஆய்வுகளை ஆர்வமின்றி காப்பியடித்து செய்தனரோ? உண்மையாக மாதிரி ஆய்வைச் செய்தவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய ஆர்வம் கொள்வார்கள்!


நம் அடிமட்ட சமுதாயத்தின் கேட்பாரற்ற நிலை


மேல் மட்டத் தலைவர்கள் ஒரு காட்சி (show) காட்டி செல்கிறார்கள். கீழ்மட்டத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள்கூட அவர்களின் குடும்பங்களை மேல்நிலைக்குக் கொண்டுவர ஆர்வமற்று இருக்கிறார்களே! இதுதான் நம் சமுதாயத்திற்குக் கிடைத்த சாபக்கேடோ?

பரிந்துரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

அண்மை

சிறந்த ஆசிரியர்கள்

அதிக கருத்து

காணொளிகள்

வகையினம்