சுங்கை சிப்புட், செப். 16 –
“இந்திய சமுதாயத்தின் நலனைக் காக்கும் ஒரே அரசியல் கோட்டை ம.இ.காவே. அதை யாராலும் அசைக்க முடியாது,” என்று தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் உறுதியோடு அறிவித்தார்.“ம.இ.காவை மிரட்ட வேண்டாம். எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்கள் சேவை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தப்படாது” என்று அவர் வலியுறுத்தினார்.
சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மண்டபத்தில், ம.இ.கா முன்னாள் மகளிர் செயற்குழுவும் பேராக் மாநில ம.இ.காவும் இணைந்து நடத்திய மூத்த மகளிர் ஒன்று கூடும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
“சாடியவர்கள் இன்று அமைதியில்…”
“ம.இ.கா இந்தியர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை” என்று குறை கூறிய பலரும், அரசியல் மேடையில் தீப்பொறி சிந்தினாலும், இன்று அவர்கள் அமைதியாகி விட்டனர்.

சவால்களைக் கடந்து வந்த சரித்திரம்

ம.இ.கா.வின் பயணம் எப்போதுமே சவால்களால் நிரம்பியது.
நாட்டின் சுதந்திர காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் நிலை ஆபத்தில் இருந்தபோது, புதிய பள்ளிகளை நிறுவவும் பழையவற்றை சீரமைக்கவும் போராடியது ம.இ.கா.ஏழை சமூக மறுமலர்ச்சிக்காக நலத்திட்டங்களை முன்னெடுத்தது.உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் இடமின்றி தவித்த இந்திய மாணவர்களுக்கு கெடா AIMST பல்கலைக்கழகம் என்ற மாற்றுப் பாதையை அமைத்தது. இதன் வழி ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் உருவாகினர்.

“இவை அனைத்தையும் தெரிந்தும், ‘ம.இ.கா என்ன செய்தது?’ என்று கேட்பது சத்தியத்தை மறைப்பதற்கு சமம். இன்று ஆட்சியிலிருப்பவர்கள் எவ்வளவு எளிதில் இந்திய சமுதாய பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“ம.இ.கா. அழியாது”
தற்போதைய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையிலும், இந்திய சமுதாயத்திற்கான சேவையை தொடர்ந்து வழங்கிவருவதாக விக்னேஸ்வரன் உறுதி தெரிவித்தார்.
“சமூக நலனை காக்கும் ஒரே கட்சி ம.இ.காவே. இந்தக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது,” என்றார் அவர்.


















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *