கோலாலம்பூர், செப்டம்பர் 3 – சபா உச்சநிலைத் தலைமைக்கான போட்டியில், சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ பங் மொக்தார் ராடின் தனது பெயரை முன்வைத்து, வாக்காளர்கள் தன்னை முதலமைச்சராக கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
“என்னை ஏன் முயற்சி செய்யக்கூடாது?” என்று அவர் KiniTV பாட்காஸ்டில் வலியுறுத்தி, ஏற்கனவே வாய்ப்பு பெற்ற தலைவர்களுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தினார்.
ஹாஜிஜி நிர்வாகத்தை விமர்சனம்
லமாக் மாநிலத் தொகுதி கினபாத்ங்கான் எம்.பி. பங், தற்போதைய முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூரின் கபுங்கன் ரக்யாட் சபா (GRS) அரசு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த முடியாமல் தவறிவிட்டதாகச் சாடினார்.
“‘சபா மஜு ஜெயா’ என்ற முழக்கம் உயர் மட்டத்தில் உள்ளது. ஆனால் தரையில், சாலைகள் குழியால் சேதமடைந்துள்ளன, தண்ணீர் இல்லை, மின்சாரம் ஒரு நாளில் எட்டு முறை துண்டிக்கப்படுகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் தரவின்படி, சபாவின் வாக்காளர் பட்டியல் 2020 மாநிலத் தேர்தலில் 1.12 மில்லியனாக இருந்தது, தற்போது 1.77 மில்லியனாக உயர்ந்துள்ளது.
தலைமைத்துவ வாய்ப்பு
பங், வாரிசான் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஷாஃபி அப்தால் முன்னாள் முதலமைச்சராக இருந்ததும், தற்போது ஹாஜிஜி பதவியில் இருப்பதையும் நினைவூட்டினார். “மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிடைக்கவில்லை,” என அவர் கூறினார்.
2020இல் ஹாஜிஜி பதவியேற்ற பிறகு, தன்னிடம் துணை முதலமைச்சர் மற்றும் பணி அமைச்சகம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டும், இறுதியில் வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் கொடுக்கப்பட்டதால் தன்னை ஏமாற்றியதாக பங் குற்றம் சாட்டினார்.
“முதல் நாளிலேயே அவர் என்னை ஏமாற்றினார். ஒரு மணி நேரத்தில் சரி செய்யாவிட்டால் பிஎன் அரசை கலைத்துவிடுவேன் என்று சொன்னேன். பின்னர் அவர் மாற்றம் செய்தார்,” என பங் கூறினார்.
கூட்டணித் தகராறு மற்றும் ஊழல் குறிப்பு
அவருக்கும் ஹாஜிஜிக்கும் இடையிலான உறவு மோசமடைந்து, இறுதியில் 2022இல் GRS கூட்டணியிலிருந்து அம்னோ, பாரிசான் நேஷனல் வெளியேற்றப்பட்டதாக பங் விளக்கினார்.
அம்னோவில் தொடர்ந்திருந்தால், ஊழல் சாயம், குறிப்பாக சந்தேகத்திற்குரிய கனிம ஆய்வு ஒப்பந்தங்கள் கட்சிக்கு அபாயமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய திட்டங்கள் மற்றும் பார்வை
பங், சபாவின் இயற்கை வளங்களை யயாசன் சபா மேற்பார்வையிலான புதிய அமைப்பு மூலம் நிர்வகிக்க வலியுறுத்தினார். அதிலிருந்து கிடைக்கும் வருவாய் “சபா மக்கள் சமூக நல நிதி”க்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.
“தலைமைத்துவத்தின் அர்ப்பணிப்பு எந்த கூட்டணியையும் விட முக்கியமானது. மக்களை உயர்த்துவதற்கு நேர்மை இல்லையென்றால், சபா என்றும் ஏழையாகவே இருக்கும். அதை மாற்ற நான் உறுதியாக இருக்கிறேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மின்சாரம் மற்றும் நீர் சப்ளை பற்றாக்குறை முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாகவும், இதனால் சபா மக்கள் வேலைக்காக தீபகற்ப மலேசியாவுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.அதை சரிசெய்யும் வகையில் அவர் முன்மொழிந்த திட்டங்களில் சபாவின் முக்கிய விமான நிலையத்தை மாற்றுவது,குடாட்டில் புதிய துறைமுகம் அமைத்தல்,மாநிலத்துடன் இணைந்த நிறுவனங்களை மறுசீரமைத்தல்,பல்கலைக்கழக மட்டம் வரை இலவச கல்விக்கு நிதியளித்தல் ஆகியவை அடங்கும்.
வரவிருக்கும் தேர்தல்
சபா மாநிலத் தேர்தல் இந்த ஆண்டு டிசம்பர் 7க்குள் நடத்தப்பட வேண்டும். பலமுனைப் போட்டிகள் நிகழ வாய்ப்பு உள்ளது.
பகாத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையே சமரசம் தேடப்படுவதாக இருந்தாலும், GRS மற்றும் BN நேரடியாக மோதும் சூழல் உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *