ஈப்போ, செப்டம்பர் 1 – பேராக் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது சுல்தான் நஸ்ரின் ஷாவை நோக்கி விரைந்து சென்ற பெண்ணை தவறாக “சீன பெண்” என அடையாளம் காட்டிய தனது பேஸ்புக் பதிவிற்காக, பாஸ் மன்ஜோய் சட்டமன்ற உறுப்பினர் ஹபீஸ் சப்ரி மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவரது ஆரம்ப பதிவு சில நிமிடங்களில் திருத்தப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன்பே “பொறுப்பற்ற தரப்பினர்” அதன் ஸ்கிரீன்ஷாட்டை பரப்பியதால் அது வைரலானதாகவும் ஹபீஸ் விளக்கம் அளித்தார்.
“எனக்கு இனப் பிரச்சினைகளை தூண்டும் நோக்கம் எதுவும் இல்லை. பாதுகாப்பு மீறல்களை யார் செய்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். மனிதனாக, நான் தவறுகளிலிருந்து விடுபட்டவன் அல்ல,” என்று அவர் தனது புதிய பதிவில் தெரிவித்தார்.
சம்பவம் எப்படி நடந்தது
தேசிய தின அணிவகுப்பின் போது, 41 வயதான ஒரு பெண் பக்கவாட்டில் இருந்து மேடையில் நுழைந்து சுல்தான் நஸ்ரினை நோக்கி சென்றார். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தடுத்து கைது செய்தனர்.
பின்னர் காவல்துறை அவர் ஒரு மலாய் பெண் என்றும், மனநல சிகிச்சை பெற்றவராக இருந்த வரலாறு உள்ளார் என்றும் உறுதிப்படுத்தியது. சீனப் பெண் என்ற குற்றச்சாட்டை அதிகாரிகள் தெளிவாக மறுத்தனர்.
ஈப்போ காவல்துறைத் தலைவர் அபாங் ஜைனல் அபிடின், அந்தப் பெண் தற்போது காவலில் இருப்பதாகவும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 325/511 இன் கீழ் “கடுமையான காயப்படுத்த முயற்சி” குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் எதிரொலி
இந்த பதிவுக்கு எதிராக பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் உள்ள டிஏபி இளைஞர் பிரிவுகள் ஹபீஸுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளன.
இதையடுத்து ஹபீஸ், தானும் இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
 
																				



















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *